விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், ’அர்ஜூன் ரெட்டி’.
சந்தீப் ரெட்டி இயக்கி இருந்த இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. வெறும் 5 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம், ரூ. 41. 5 கோடி வசூலித்து சாதித்தது. இதையடுத்து இதன் ரீமேக் உரிமையை வாங்க, தமிழ், மலையாளம், கன்னட சினிமா துறையினர் போட்டி போட்டனர்.
தமிழ் ரீமேக் உரிமையை வாங்க, தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் போட்டியிட்டன. இதன் ரீமேக்கில் நடிக்கவும் தனுஷ் முடிவு செய்திருந்தார். ஆனால் அவர்களின் டீலிங் படியவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தின் தமிழ், மலையாள டப்பிங் மற்றும் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இதையடுத்து சென்னையில் ஓடிக்கொண்டிருந்த ’அர்ஜூன் ரெட்டி’யின் தெலுங்கு பதிப்பும் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன் ரீமேக்கில் எந்த ஹீரோ நடிக்கப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.