சினிமா

"நிதிஷ் வீரா... மிகப் பெரிய இழப்பு!" - கொரோனா விழிப்புணர்வை வலியுறுத்திய வெற்றி மாறன்

"நிதிஷ் வீரா... மிகப் பெரிய இழப்பு!" - கொரோனா விழிப்புணர்வை வலியுறுத்திய வெற்றி மாறன்

sharpana

”2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள். ஆனால் இன்று காலை நிதிஷ் வீரா இறந்துவிட்டார் என்ற செய்திதான் வந்தது” என்று கொரோனாவால் உயிரிழந்த நடிகர் நிதிஷ் வீராவுக்கு உருக்கமுடன் இரங்கல் தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

‘புதுப்பேட்டை’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘கபாலி’ மற்றும் ‘அசுரன்’ போன்ற திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் நடித்த நிதிஷ் வீரா கொரோனா தொற்றால் இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் உருக்கமுடன் நிதிஷ் வீரா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”நண்பர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார் என்று நேற்று மாலைதான் எனக்கு தகவல் வந்தது. உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன். 2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள். ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்திதான் வந்தது.

அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும். அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார். நடிகராக அவருக்கு வெற்றி தோல்வி  இருந்து வந்தது. ஆனால், அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும், என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் அனைவரும் சரியான முறையில் முகக்கவசத்தை அணிய வேண்டும்; 'நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், உடல் வலிமையுடன் இருக்கிறேன், எனக்கு கொரோனா வராது' என்று யாரும் எண்ண கூடாது; வெளியே சென்று வரும் இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இயக்குநர் வெற்றிமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இணைப்பு > வெற்றிமாறன் வீடியோ