சினிமா

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ - வெளியான புதிய அப்டேட்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ - வெளியான புதிய அப்டேட்

சங்கீதா

இயக்குநர் வெங்கட் பிரபுவின் மன்மதலீலை திரைப்படத்தின் ட்ரெயிலர் வருகிற 21-ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு ‘மாநாடு’ என்ற திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் அசோக் செல்வனை வைத்து ‘மன்மத லீலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ‘மன்மதலீலை‘ திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், “இந்தப் படம் மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம்.

இந்தப் படம் 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வெறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது. 

ஊரடங்கு நேரத்தில், இந்தக் கதை பற்றி எனது உதவி இயக்குநர் மணிவண்ணனும், நானும் கலந்துரையாடினோம். அப்போது மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தக் கதை இருந்ததால், இதனை ஸ்கிரிப்ட்டாக மாற்றுமாறு அவரிடம் கூறினேன். நகைச்சுவை மட்டுமின்றி, ‘மன்மதலீலை‘ படத்தில், கதாநாயகன் கடைசியில் சிக்குவாரா, சிக்கமாட்டாரா என்ற த்ரில்லரும் நிறைந்து இருக்கும்.

மேலும், ‘மாநாடு‘ படத்திற்கான பணிகள் செய்துகொண்டிருந்தபோதே, இந்தப்படத்தை எடுத்து முடித்துவிட்டோம்” இவ்வாறு வெங்கட் பிரபு கூறியிருந்தார். அண்மையில் இந்தப் படத்திலிருந்து க்ளிம்பஸ் காட்சிகள் வெளியானது. இந்தப் படத்திற்கு ‘ஏ’ சர்டிஃபிகேட் அளிக்கப்பட்டநிலையில், வருகின்ற ஏப்ரல் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதையடுத்து இந்தப் படத்தில் பிரேம் ஜி இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், வரும் 21-ம் தேதி ட்ரெயிலர் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.