சினிமா

”கமல், ரஜினி படம் ஒரே நாளில் வெளியானது; ஆனால்” -‘விக்ரம்’ அனுபவம் பகிரும் வசந்தபாலன்

”கமல், ரஜினி படம் ஒரே நாளில் வெளியானது; ஆனால்” -‘விக்ரம்’ அனுபவம் பகிரும் வசந்தபாலன்

sharpana

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாவதையொட்டி ’விக்ரம் 1’ பார்த்த அனுபவம் பகிர்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

" பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது ’விக்ரம்’ படம் விருதுநகர் அப்சராவில் வெளியானது. அதே நாளில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த விடுதலை திரைப்படமும் வெளியானது. அன்று நான் தீவிரமான கமல் ரசிகனாக இருந்தேன். எம்ஜிஆர் ரசிகனாக இருந்து ’பில்லா’ படம் பார்த்து ரஜினி ரசிகனாக மாறி , மெல்ல வாசிப்பு பழக்கம் அதிகமானபோது கமலின் தீவிர ரசிகனாக மாறியிருந்தேன். அந்தக் கால கட்டத்தில் பலரும் என்னைப்போல தான்.

குமுதத்தில் சுஜாதா அவர்கள் 'விக்ரம்' கதையை தொடர்கதையாக எழுதி வெளியானபோதே தொடர்ந்து வாசித்து வந்தேன். தமிழ்வாணனை வாசித்தப்போது ஏற்பட்ட துப்பு துலக்கும் கதை ருசி இதிலும் கிடைத்தது. திரை வெளியீட்டுக்கு முன்பே பாடல்கள் வெளியாகி பெரும் வெற்றியடைந்திருந்தது பாட்டு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு வனிதாமணி வனமோகினி என்று பாடிக் கொண்டே வார்த்தைகளில் கிறங்கி விக்ரம் என்ற முதல் டிஜிட்டல் லோகோவில் மயங்கி கிடந்த காலம்.

விக்ரம் படம் வெளியான அன்று காலை முதல் இரண்டு காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. மதியம் 4/30 மணி காட்சிக்காக பெண்கள் கவுண்டரில் மதியம் 1 மணிக்கு சென்று அந்த வரிசையில் மத்'தியானம்', வெக்கை, புழுக்கம், பசி, தாகம் என பல உணர்வுகளுடன் காத்திருந்து கனவோடு டிக்கெட் கவுண்டரில் கை நுழைத்து திரையரங்க குடிதண்ணீர் குழாயில் அடிபிடி சண்டை செய்து தண்ணீர் குடித்து பசியாறி இளைப்பாற வெள்ளித்திரைக்கு எதிரே முதல் வரிசையில் என்ன படம் பார்க்கிறோமுன்னு தெரியாமல் மொத்த படத்தில் எங்கெல்லாம் தலைவன் வருகிறாரோ அங்கெல்லாம் கத்தி விசிலடித்து துண்டு பேப்பர்களை பறக்க விட்டு படம் பார்த்து விக்ரம் விக்ரம் என்று கத்தியபடி திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இரவாகிருந்தது.

பசி காண்டாமிருகம் போல என் முன் எழுந்து நின்றது. மெதுவாக வீடு திரும்பும் போது விருதுநகர் முழுக்க விக்ரம், விடுதலை என்ற இரண்டு பெயர்களையும் மாறி மாறி உச்சரித் தவண்ணம் இருந்தது. எங்கள் தெருவில் நிற்கும் வேப்பமரம் காத்தடிக்கும்போது உதிர்க்கும் வேப்பம்பழத்தை வாயில் போடும் போது என் ஜோடி மஞ்சக்குருவி பாடல் இனிக்கத் துவங்கியது.

படத்தின் துவக்கத்தில் டிஜிட்டல் டைட்டில் வரத்துவங்கியது தமிழ் சினிமாவிற்கு புதியது. டைட்டில் பாடல் விக்ரம் விக்ரம் பாடலும் காட்சி அமைப்பு ஜேம்ஸ் பாண்ட் பாணியில் இருக்கும். காக்கி சட்டையில் தகடு தகடு என கலக்கிய சத்யராஜ் வில்லன் என்பது படத்திற்கு கூடுதல் பலம். சுஜாதா தொடர்கதையில் இருந்தது என்ன திரைப்படத்தில் இல்லை என்று யோசித்து கொண்டிருந்தேன். ஒன்று நிச்சயம் பள்ளிப்பருவ மாணவனை அன்று ஆச்சரியத்தில் ஆழ்த்திய கமல் இத்தனை வருடத்தில் விடாது அந்த விடயத்தை விக்ரம் 2 ட்ரைலர் வரை தக்க வைத்திருக்கிறார். வாழ்த்துகள் கமல் சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.