செய்தியாளர்: பிர்தோஸ்
மௌன கீதங்கள், படிக்காதவன் உள்ளிட்ட பழைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மாஸ்டர் சுரேஷ், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரஜினியின் படிக்காதவன் படத்தில் சிறுவயது ரஜினி கதாபாத்திரம், இயக்குநர் பாக்யராஜின் மௌன கீதங்கள் படத்தில் அவரின் மகன் (‘டாடி டாடி ஓ மை டாடி’ பாடலில் வரும் சுட்டிக்குழந்தை), ரங்கா படத்தில் கே.ஆர்.விஜயாவின் மகன் என பல முக்கிய கதாபாத்திரங்களில் பெரிய நடிகர்களோடு நடித்து கவனம் ஈர்த்திருப்பார்.
இவர் வளர்ந்தபின் திரைப்படங்கள் இயக்கிவந்தார். சூர்ய கிரண் என்ற பெயரில் தெலுங்கில் சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், Chapter 6 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் இவர். தெலுங்கு பிக்பாஸில் 6-வது சீசனில் உள்ளே சென்றுவந்துள்ளாரும்கூட. இந்நிலையில் தமிழில், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள அரசி என்ற படத்தை சூர்ய கிரண் இயக்கியுள்ளார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சூர்ய கிரண் இன்று காலமானார்.
குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விரும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார் இவர். இவரது உடல் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.