சினிமா

“அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது” - ‘விஸ்வாசம்’ சிவா

“அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது” - ‘விஸ்வாசம்’ சிவா

webteam

வரும் 10ம் தேதி சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இதற்காக டிக்கெட் முன்பதிவு பல திரையரங்குகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்நிலையில் உண்மையும், பாசமும், நேசமும், எகத்தாளமும் கொண்ட மக்கள் வாழும் கிராமத்து பின்னணியில் கதை நடப்பதால், திரைக்கதை எழுதும்போதே ‘விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு திருவிழா தோரணை வந்துவிட்டதாக இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார். இப்படம் குறித்தும், அதில் நடித்த அஜித்குமார் குறித்தும் தனது அனுபவங்களை 'இந்து தமிழ் திசை' நாளிதழில் அவர் பகிர்ந்துள்ளார். 

அதில் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடம் கிடையாது. அஜித் ஏற்றுள்ள ‘துரை’ கதாபாத்திரம் இரு பரிமாணங்களில் வரும். படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த மக்களிடமே பேசி, பழகி, மதுரை வட்டார வழக்கை அஜித் கற்றுக்கொண்டார். இதுவரை இல்லாத புதிய உடல்மொழியை வெளிப்படுத்தி பக்கா கிராமத்து நபராக நடித்திருக்கிறார் அஜித் என்று தெரிவித்துள்ளார்.

‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பேசிய சிவா, படத்தில் மொத்தம் 4 ஆக்‌ஷன் பகுதிகள். நான்குமே கதையுடன் ஒட்டியே இருக்கும். இதுவரை சினிமாக்களில் நாம் கண்டிப்பாக பார்த்திராத பைக் சண்டைக்காட்சி ஒன்றும் இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இப்படம் ஆழமான, குடும்பப் பாங்கான, உணர்வுகள் நிறைந்த படம். அஜித் விவசாயியாக வருகிறார். இது ஒட்டுமொத்த குடும்பத்துக்குமான பொழுதுபோக்கு கமர்ஷியல் திரைப்படம் என்றும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார் இயக்குநர் சிவா.

அஜித் உடனான தன்னுடைய கூட்டணி குறித்து மனம் திறந்த சிவா, எங்கள் பிணைப்பானது வெற்றி, தோல்விகளால் ஏற்பட்டது அல்ல. எங்கள் இருவருக்குமான தொழில் பக்தி, உண்மையான புரிதலால் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.