இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைக்கு இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார்.
பூந்தமல்லி அருகே நடைபெற்ற ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து நேற்று ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ஷங்கர், “மிகுந்த வருத்தத்துடன் இந்த ட்வீட்டை பதிவிடுகிறேன். அந்த துயரச் சம்பவத்தால் அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. எனது துணை இயக்குநர் மற்றும் படக்குழுவினரை இழந்ததால் தூக்கமின்றி இருக்கிறேன். கிரேன் தவறி விழுந்ததில் நூலிழையில் தப்பினேன். அந்த கிரேன் என்மீது விழுந்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மனதார இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் ஆஜராகியுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதியின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்து வருவதாக தெரிகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது, யார் யாரெல்லாம் இருந்தனர்? கிரேன் அறுந்து விழுந்தது எப்படி? கிரேன் எங்கிருந்து வரவழைக்கப்பட்டது? அதன் தாங்கு திறன் குறித்து ஏற்கனவே படக் குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டதா? எவ்வளவு கிலோ பாரத்தை கிரேன் தூக்கும் பொழுது விபத்து நேர்ந்தது? யாருடைய அஜாக்கிரதையால் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது? இந்த கிரேன் படப்பிடிப்புகளுக்கானதா ? கிரேன் பயன்படுத்த அனுமதி பெறப்பட்டதா ? என பல்வேறு கேள்விகளை இயக்குநர் ஷங்கரிடம் முன் வைத்ததாக தெரிகிறது. ஷங்கரை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், லைகா புரொடக்ஷன் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.