சினிமா

திருக்குறளுடன் பேச்சை தொடங்கிய கதாநாயகி - நெகிழ்ந்து பாராட்டிய இயக்குநர்

திருக்குறளுடன் பேச்சை தொடங்கிய கதாநாயகி - நெகிழ்ந்து பாராட்டிய இயக்குநர்

நிவேதா ஜெகராஜா

தமிழ்சினிமாவின் தமிழச்சிகளின் காலம் தலைதூக்கும் என நம்புவதாக ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.

எழில் இயக்கத்தில் நடிகர்கள் பார்த்திபன், கவுதம் கார்த்திக் நடித்துள்ள `யுத்த சத்தம்’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், கவுதம் கார்த்தி, நாயகி நடித்த சாய்பிரியா மற்றும் இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில் பேசிய கதாநாயகி சாய்பிரியா, படத்தைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தபின் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்ற திருக்குறளை கூறினார். மேலும் “விவசாயிகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான குரல் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார். அத்துடன் வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு என பேச்சை முடித்தார்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, “திரையுலகில் 32 வருடமாக இருக்கிறேன். 1000 திரைப்பட விழாக்களில் பங்கேற்று உள்ளேன். ஆனால், அந்த விழாக்களில் நடக்காதது ஒரு நிகழ்வு இந்த விழாவில் நடந்துள்ளது. ஒரு திரைப்படத்தின் நாயகி விழா மேடையில் திருக்குறள் கூறியுள்ளார். இதை நான் எந்த மேடையிலும் பார்த்ததில்லை. இதே போல 'கூகுள் குட்டப்பன்' படத்தின் நாயகி லாஸ்லியாவின் நன்றாக தமிழ் பேசுகிறார். இதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் திரையுலகில் தமிழ் பேசும் நாயகிகளின் காலம் தலைதூக்கும் என நம்புகிறேன்” என மகிழ்ச்சியுடன் பேசினார். யுத்த சத்தம் படத்தில் நடித்துள்ள சாய் பிரியா, முருகன் திரையரங்க உரிமையாளரின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.