சினிமா

மீ டூ விவகாரம்: புதிய படத்தில் இருந்து ஸ்ருதி நீக்கம்!

மீ டூ விவகாரம்: புதிய படத்தில் இருந்து ஸ்ருதி நீக்கம்!

webteam

மீடு விவகாரம் தொடர்பாக கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் புதிய படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.

பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாடகி சின்மயின் புகாரை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை, நடிகை அமலா பால் ஆகியோர் இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்திருந்தனர்.

அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகாரை மீ டூ மூலம் வெளிப்படுத்தினார். அதாவது ‘விஷ்மயா’ (தமிழில் நிபுணன்) படப்பிடிப்பின் ஒத்திகை காட்சி ஒன்றில் தவறான முறையில் அர்ஜூன் தன்னிடம் நடந்துகொண்டதாக அவர் குற்றஞ்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் 5 பக்கத்துக்கு புகார் எழுதியிருந்தார்.

ஸ்ருதி ஹரிஹரன் புகாரை மறுத்திருந்த அர்ஜூன் அவர் மீது வழக்குப் பதிவு செய்வேன் எனக் கூறியிருந்தார். அர்ஜூனுக்கு ஆதரவாக எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே, தன் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ருதி மீது 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்தார்.

 இதனிடையே, 2015ம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் தன்னிடம் அர்ஜூன் அத்து நடந்து கொண்டதாகவும், தன்னுடைய அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன், கப்பன்பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

(நிபுணன் படத்தில்...)

இந்நிலையில், நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு போலீசார் அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஸ்ருதி ஹரிஹரன், ’தாரி தப்சிட்தான் தேவ்ரு’ (Daari Tapsidna Devru) என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதை பி.எஸ். லிங்காதேவ்ரு இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் மூன்றாவது வாரம் தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் ஸ்ருதி இந்தப் படத்தில் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

இதுபற்றி இயக்குனர் லிங்கதேவ்ரு கூறும்போது, ‘இந்த படத்தின் ஷூட்டிங் 45 நாட்கள் நடக்க இருக்கிறது. ஸ்ருதி ஹரிஹரனின் கால்ஷீட் 30 நாட்கள் தேவை. ஆனால், அவர் ஜனவரி மாதக்குப் பின் வர இயலாது என்று கூறிவிட்டார். அதோடு அர்ஜூன் மீது தொடுத்துள்ள வழக்கு காரணமாக அவர் நீதிமன்றத்துக்கும் செல்ல வேண்டும் என்பதால் அவரை படத்தில் எங்களால் நடிக்க வைக்க முடியாது. வேறு ஹீரோயினைத்தான் தேட வேண்டும்’ என்றார். 

அதோடு மீடு விவகாரம் பற்றி அவர் கூறும்போது, ‘இந்த விவகாரம் நான்கு சுவருக்குள் முடிந்திருக்க வேண்டும். பொதுவெளியில் வந்து ரசிகர்கள் மோதிகொண்டு மோசமாகிவிட்டது’ என்றார்.