சினிமா

“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..!

“கதை வருணுடையது என்றால் என்னை தப்பா பேசுவாங்கனு முருகதாஸ் சொன்னார்”- சர்கார் சமரசத்தில் பாக்யராஜ் பேட்டி..!

webteam

சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் இதுதொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்துள்ளது.

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதனிடையே ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம்  இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டது.

இதனிடையே, செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு, வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவித்திருந்தது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் இதுதொடர்பான வழக்கு சமரசத்தில் முடிந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாள சங்க தலைவர் பாக்யராஜ், “ வருண் எழுதிய கதையின் கருவும்- சர்கார் பட கதையின் கருவும் ஒன்றுதான். பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இயக்குநர் முருகதாஸிடம் முன்னதாக தெரிவித்திருந்தேன். வருணின் கதை என ஒப்புக் கொண்டால் தன்னை தவறாக பேசுவர் என முதலில் முருகதாஸ் மறுத்தார். இதனையடுத்து இணை இயக்குநரான வருணின் பிரச்னை பற்றி முருகதாஸிடம் விளக்கினேன். எனது மகன் கூட விஜயின் ரசிகன்தான். ஆனால் சங்க தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் காயப்பட்டது நான்தான். விஜய் ரசிகர்கள் எனது முடிவை புரிந்து கொள்ளாமல் எனது மகனை கடுமையாக விமர்சித்தனர். இணை இயக்குநர் வருணை விட இயக்குநர் முருகதாஸ் எனக்கு அதிகம் அறிமுகமானவர்தான்.

மேலும், ‘என் படம் பார்த்து செய்யுங்கள் என விஜய் கூறவில்லை. அவரின் பெருந்தன்மை பிடித்திருந்தது. என்னுடைய படம் என்பதற்காக அல்லாமல் எது சரியோ, அதன்படி முடிவெடுங்கள் என விஜய் என்னிடம் கூறினார். பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படமாக உருவாக்கியது முருகதாஸ் உழைப்பு. ஆனால் 10 வருடங்களுக்கு முன்பே வருண் அந்த கருவை உருவாக்கியிருக்கிறார். அதன்படி டைட்டில் அவருக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் ஓட்டை வேறு யாரோ போட்டுச்சென்றதன் அடிப்படையில் உருவானதுதான் ‘மையக்கரு’. படக் கதை விவகாரத்தில் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து இயக்குநர் முருகதாஸ் இறங்கி வந்ததற்கு நன்றி.” என தெரிவித்தார்.