சினிமா

துப்பறிவாளன் 2-ல் என்னதான் குழப்பம்? - மிஷ்கின் சொன்ன நிபந்தனைகள் என்ன?

துப்பறிவாளன் 2-ல் என்னதான் குழப்பம்? - மிஷ்கின் சொன்ன நிபந்தனைகள் என்ன?

subramani

மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படம் வெற்றியடையவே அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பது என படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி விஷால், பிரசன்னா, கெளதமி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடிக்க ‘துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே துப்பறிவாளன் 2 படத்தை மேற்கொண்டு விஷாலே இயக்குவார் என முடிவு செய்யப்பட்டதாக செய்திகள் வந்தன. விஷாலும் ஒரு பேட்டியில் அதனை உறுதி செய்தார்.

இக்குழப்பங்களுக்கு இடையே விஷால் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி இன்று (மார்ச் 11) துப்பறிவாளன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.

துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் குறித்த விஷாலின் நேற்றைய பதிவில் கூட விஷால் மற்றும் இளையராஜாவின் பெயர்கள் தான் இருந்தது. மிஷ்கினின் பெயர் இல்லை. எனவே துப்பறிவாளன் 2 படத்தில் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே என்ன தான் பிரச்னை என பலரும் விவாதித்து வரும் நிலையில், விஷாலுக்கு மிஷ்கின் அனுப்பியதாக ஒரு கடிதமொன்றும் இணையத்தில் உலாவருகிறது. அதில் விஷாலுக்கு மிஷ்கின் துப்பறிவாளன் 2 குறித்து விதித்த நிபந்தனைகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இது கூட மிஷ்கின் விஷால் இடையே விரிசலை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் சொல்கின்றனர் சிலர்.

அக்கடிதத்தில் மிஷ்கின் விதித்த நிபந்தனைகள் :

1. சம்பளம் 5 கோடி ரூபாய் ஜிஎஸ்டி சேர்க்காமல்.

2. துப்பறிவாளன் 2 படத்தின் இந்தி ரீமேக் உரிமை இயக்குநருக்கே உண்டு. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும். மேலும், தயாரிப்பாளருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இருக்கக்கூடாது.

3. படத்தின் தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ), கணியன் பூங்குன்றன், மனோகரன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்கள், துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களின் பெயர்கள் என அனைத்து அறிவுசார் உரிமைகளும் இயக்குநருக்குச் சொந்தமானதேயாகும்.

4. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் வேறு படங்களில் தன்னை கமிட் செய்து கொள்ளலாம். எந்தவொரு காரணத்திற்காகவும் 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநரின் கால்ஷீட் மீண்டும் கிடைக்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க வேண்டும்.

5. தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடித் தொடர்பு இருக்காது. இயக்குநரின் மேலாளர் எல்.வி. ஸ்ரீகாந்த் லக்‌ஷ்மன் மூலம் மட்டுமே இயக்குநரை தொடர்புகொள்ள முடியும். அதே போல விஷால் ஃபிலிம் ஃபேக்டரியால் நியமிக்கப்பட்ட நிர்வாக தயாரிப்பாளர் சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரைத் தொடர்புகொள்ள அவரது பிரதிநிதியாக செயல்படுவார்.

6. மேற்கண்ட நிபந்தனைகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணம் எவ்வளவு என்பது இயக்குநரால் முடிவு செய்யப்படும்.

7. இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் முன்பே பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.

8. படப்பிடிப்புத் தள தேர்வில் தயாரிப்பாளர் தலையிடக் கூடாது. இடங்களை முடிவு செய்யும் அனைத்து உரிமைகளும் இயக்குநரையே சாரும்.

9. படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. ஆனால், செலவினங்களைக் குறைக்க இயக்குநர் சிறந்த முயற்சிகளை எடுப்பார். இருப்பினும், படத்தின் மொத்த செலவுகளுக்கு இயக்குநர் எந்தவித வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்.

10. திரைப்படம் தணிக்கைக்காக விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்டபடி அவரது உதவியாளர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.

11. இயக்குநர் மற்றும் இயக்குநரின் உதவியாளர்களுக்கு, இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனித் தங்குமிடம் வழங்கப்பட வேண்டும்.

12. 66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்புத் தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்பட வேண்டும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்சாரச் செலவு, உணவுச் செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலகச் செலவுகள் போன்றவை பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து படத்தின் இறுதி வடிவம் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.

13. படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல் தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும்.

14. இயக்குநரின் படைப்பு சுதந்திரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல், துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் மனநிலையைப் பாதிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.

15. மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம், முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்தாகும்.