தனுஷ் தெலுங்கின் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு வழங்கி சிறப்பித்துள்ளது.
கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்திற்குப் பிறகு செல்வராகவனின் ‘நானே வருவேன்’, தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா படங்களில் நடிக்கவிருக்கிறார் தனுஷ். தெலுங்கின் முன்னணி இயக்குநரும் தேசிய விருது பெற்றவருமான சேகர் கம்முலாவுடன் தனுஷ் இணையும் அறிவிப்பு தனுஷ் அமெரிக்காவில் ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பில் இருக்கும்போதே வெளியானது. இப்படத்தை நாரயணன் தாஸ் நரங்கும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் புஷ்கர் ராம் மோகன் ராவ்வும் தயாரிக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாக்கப்படவுள்ளது. இம்மாத துவக்கத்தில் தனுஷ் இந்தியா திரும்பியதும் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மாறன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டே, இயக்குநர் சேகர் கம்முலா, தயாரிப்பாளர்கள் நாரயணன் தாஸ் நரங், புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சேகர் கம்முலாவும் இன்று தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ’விரைவில் படப்பிடிப்பு துவக்கம்’ என்று அப்டேட் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், இன்று தனுஷின் 38 வது பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனக்களில் ஒன்றான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் ஹைதராபாத்தில் இன்று ஏழைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.