நடிகர் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தின் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு உலக அளவில் வெளியான திரைப்படம் ‘விவேகம்’. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்தது. இதைத்தொடர்ந்து ‘விவேகம்’ திரைப்படத்தை மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெளியிடும் உரிமையை மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். படநிறுவனத்திற்கு ரூ.4.25 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் வழங்கியது.
ஆனால் அதே வேளையில் வேறு நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கி மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சென்னை காவல் ஆணையரிடம் இதுகுறித்து 2017ல் அளித்த புகாரில் நடவடிக்கை இல்லை எனவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் டி.எஸ்.ஆர். படநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிளாட்டஸ் பிரெட்ரிக் ஹென்றி, எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பி.நாகராஜன், மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்தரம் இருப்பதால் மலேசிய நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் 'சத்யஜோதி' தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.