விஜய் சேதுபதி நடித்து நாளை வெளியாக இருந்த, 'புரியாத புதிர்' படத்துக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு (பெப்சி) பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், விஜய்சேதுபதி நடித்துள்ள 'புரியாத புதிர்' படம் 1-ம் தேதி வெளியாக இருக்கிறது.. இந்த திரைப்படத்தை தயாரிக்கும்போது ஒப்பனைக் கலைஞர்கள், ஓட்டுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. தென்னிந்திய சினிமா மற்றும் டிவி சண்டை கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.2.17 லட்சம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு மேலாளர்கள் சங்கத்துக்கு ரூ.1.67 லட்சம், கலை இயக்குநர்கள் சங்கத்துக்கு ரூ. 4.28 லட்சம் உள்பட பல சங்கங்களுக்கு ரூ. 22 லட்சத்து 13 ஆயிரத்து 51 இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் படத்தை தயாரித்துள்ள ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் உரிமையாளர் ஜே.சதீஷ்குமார் படத்தை திரையிடுவதற்கு முன்பாக, சம்பள நிலுவைத் தொகை அனைத்தையும் தருவதாக உறுதியளித்து இருந்தார். ஆனால் கூறியபடி தொகையை வழங்காமல் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த தொகையை தராமல் இப்படம் வெளியிடப்பட்டால் ஏழைத் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று 2-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி சி.கார்த்திகா முன்பு விசாரணைக்கு வந்தது. செப்டம்பர் 14-ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் இதுதொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.