சினிமா

ஜூன் 1 முதல் சினிமா அவுட்டோர் யூனிட் அமைப்புகள் வேலைநிறுத்தம்

ஜூன் 1 முதல் சினிமா அவுட்டோர் யூனிட் அமைப்புகள் வேலைநிறுத்தம்

Veeramani

ஜூன் 1-ஆம் தேதி முதல் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு கேமரா, லைட் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கும் அவுட்டோர் யூனிட் அமைப்புகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், இணைய தொடர்களுக்கான படப்பிடிப்புகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதற்கு ஏற்ற தொழிலாளர்கள் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அவுட்டோர் யூனிட் அமைப்பு தமிழ்நாடு டெக்னிசியன் அமைப்பில் இருந்து தொழிலாளர்களை எடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.



ஆனால் பெப்சி  அமைப்பிலுள்ள சில டெக்னிசியன் அமைப்புகள், புதிதாக சேர்பவர்களிடம் மூன்று லட்ச ரூபாய் செலுத்தி தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என்று கூறுவதாக தெரிவிக்கின்றனர். அந்த தொகை பெரிதாக இருப்பதால் அவர்களால் செலுத்த முடியவில்லை. மேலும் 3 லட்சம் செலுத்தாதவர்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என பெப்சி அமைப்பு மூலம் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது என குற்றம்சாட்டுகின்றனர்.  

இதற்கான பேச்சுவார்த்தை பெப்சி, அவுட்டோர் யூனிட் அமைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோருக்கு இடையில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அவுட்டோர் யூனிட் அமைப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டு இருக்கின்றனர்.  இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எட்டப்படவில்லை என்றால் நிச்சயம் வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.  



அவுட்டோர் யூனிட் அமைப்பிற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவுட்டோர் யூனிட் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதேபோல் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.