‘இந்தியன்2’ படப்பிடிப்பு விபத்து குறித்து விளக்கம் அளிக்க நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ‘இந்தியன்2’ படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விவகாரம் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக கிரேன் ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கடந்த 28ஆம் தேதி, விபத்து தொடர்பான வழக்கின் விசாரணைக்கு சென்னை வேப்பேரியில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகத்தில் இயக்குநர் ஷங்கர் ஆஜராகினார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதியின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நாளை மறுநாள் சென்னை வேப்பேரி மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி ‘இந்தியன்2’ விபத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.