தமிழ் சினிமாவின் இயக்குநர், நடிகர், எழுத்தாளர் என பன்முக திறன்கொண்ட ஈ.ராமதாஸ் மாரடைப்பால் நேற்றிரவு (ஜன.,23) காலமானதாக அவரது மகன் கலைச்செல்வன் சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார்.
அதில், தனது தந்தை எழுத்தாளர், இயக்குநர், நடிகர் ஈ.ராமதாஸ் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் காலமாகிவிட்டதாகவும், அவருடைய இறுதிச் சடங்குகள் ஜனவரி 24ம் தேதி சென்ன கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என கலைச்செல்வன் குறிப்பிட்டிருக்கிறார்.
இவரது மறைவுச் செய்தியை அறிந்த திரைத்துறையினர் ஈ.ராமதாஸின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகிறது.
யார் இந்த பன்முகத் திறன்கொண்ட ஈ.ராமதாஸ்?
1986ம் ஆண்டு ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற மோகன் நடித்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமான இந்த ஈ.ராமதாஸ், ராமராஜன் நடிப்பில் ராஜா ராஜாதான், சுயம்வரம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ்க ஜனநாயகம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த ஈ.ராமதாஸ் திரைத்துறை மீதான ஆர்வத்தால் சென்னைக்கு வந்து எழுத்தாளராக திரை வாழ்வை தொடங்கியவர் இயக்குநராகி பின்னர் நடிகராகவும் கோலிவுட்டில் உலா வந்தார்.
அதன்படி அறம், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, மாரி 2 என ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். விசாரணை படத்தில் போலீசாராக வந்த ஈ.ராமதாஸின் கேரக்டர் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.