Adipurush Twitter
பாலிவுட் செய்திகள்

கடும் விமர்சனங்களுக்கு இடையே வசூலை வாரிக்குவிக்கும் ‘ஆதிபுருஷ்’ - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் வசூலை, படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சங்கீதா

பிரபாஸ், சயீஃப் அலிகான், கீர்த்தி சனோன், சன்னி சிங் உள்ளிட்ட பலரின் நடிப்பில் தயாராகியுள்ளப் படம் ‘ஆதிபுருஷ்’. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த 16-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படம், கடும் விமர்சனங்களை சந்தித்தது. டீசர் வெளியானபோதே சிஜி பணிகள் சரிவர இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதனை சரிசெய்து படத்தை வெளியிட்டப் பின்பும் கிராபிக்ஸ் பணிகளை பலரும் விமர்சனம் செய்தனர்.

Adipurush-saif ali khan

இது ஒருபுறமிருக்க, படத்தில் உள்ள வசனங்கள், கதாபாத்திரங்களை அவமதிப்பதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் சர்ச்சை எழுந்தது. மேலும், ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் தொடர்பான விமர்சனம் மற்றும் சர்ச்சைகள் குறித்து சி.பி.எஃப்.சி. கவனத்தில் கொண்டுள்ளதாகவும், மக்களின் உணர்வுகளை புண்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கமாட்டோம் எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியிருந்தார்.

‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில் ‘சீதா தேவி இந்தியாவின் மகள்’ என்ற சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காமல் திரையிடுவது சீராக்க முடியாத சேதத்தை ஏற்படுத்தும் எனக் கூறி நேபாளம் காத்மண்டு மற்றும் போக்ஹாராவில் தடை விதிக்கப்பட்டது. மேலும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் 6 நாட்களில் 410 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.

படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், இரண்டாவது நாள் 100 கோடி ரூபாயும் வசூலித்திருந்தது. எனினும், ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘பாகுபலி 2’, பிரசாந்த் நீல்-யஷ் கூட்டணியில் உருவான ‘கே.ஜி.எஃப்’ படங்களின் முதல் நாள் வசூலை ‘ஆதிபுருஷ்’ படம் முறியடிக்கவில்லை. அதனுடன், படம் வெளியான ஒருவார வசூலிலும் ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘பாகுபலி-2’, ‘கே.ஜி.எஃப்.-2’, ‘பதான்’ ஆகியப் படங்களுக்கு அடுத்த வரிசையில் 5-வது இடத்தில் ஆதிபுருஷ் உள்ளது.