தமிழில் பிக்பாஸ் சீசன் 7 ஐ நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார். இன்னும் சிலவாரங்களில் முடிவடையும் நிலையில் உள்ள இந்நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களிடையே பல எதிர்பார்ப்புகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது.
‘பிக்பாஸ் நிகழ்சியானது இளம் தலைமுறையினரை சீரழிவிற்கு தள்ளுகிறது என்று சமீபத்தில் தகவலறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என கூறிய நிலையில், சமீபத்தில் தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 7 நடைப்பெற்று முடிந்துள்ளது. தெலுங்கில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன்7 ஐ நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். இப்போட்டியில் டைட்டில் வின்னராக பல்லவி பிரசாத் என்பவர் சில தினங்களுக்கு முன்னர்தான் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் தனது யூடியூப் சேனலில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து விவசாயம் குறித்த பலதரப்பு தகவல்களை பகிர்ந்து மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
ரன்னராக இரண்டாவது இடத்தை பிரபல சீரியல் நடிகரான அமர்தீப் பெற்றிருந்தார். அமர்தீப் முதலிடம் பெற்று வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட பல்லவி பிரசாத் முதலிடம் பெற்றது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் அமர்தீப் ஒரு நிகழ்ச்சிக்கு பின் கார் மூலம் வீட்டிற்கு சென்றபோது பல்லவி பிரசாத்தின் ரசிகர்களில் சிலர் அமர்தீப்பின் காரை துரத்தி சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அமர்தீப்பின் கார் சேதமடைந்ததாக தகவல் வெளியானதை அடுத்து இச்சம்பவம் அங்கு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இச்செயலுக்கு அமர்தீப் ரசிகர்களும் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இப்புகாரில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று பல்லவி பிரசாத்தை கைது செய்துள்ளனர். மேற்கொண்டு இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.