பிக்பாஸ் நிகழ்ச்சியில் நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது கூட சிலர் Gang Ragging செய்தார்கள் என மதுமிதா குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி தற்போது 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்த நடிகை மதுமிதா, தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகளை மீறியதாகவும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியாக மதுமிதா நசரத்பேட்டை காவல்நிலையத்தில் சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார். சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், ஆனால் தொகுப்பாளர் கமல்ஹாசனும் கூட அதனை கண்டிக்கவில்லை எனவும் தபால் மூலம் அவர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது கூட சிலர் Gang Ragging செய்தார்கள் என மதுமிதா குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த மதுமிதா, “ ‘வருண பகவானும் கர்நாடகத்தை சேர்ந்தவரோ..? மழை வடிவில் கூட தமிழகத்திற்கு தண்ணீரை தர மறுக்கிறார்’ என்ற ஒருவரிக் கவிதையை தான் கூறினேன். ஆனால் இதனை அரசியலாக்கி வேறு கோணத்தில் கொண்டுசென்று என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாத நிலைக்கு என்னை அங்கிருந்த சிலர் கொண்டு சென்றுவிட்டனர். நம் ஊரில் உள்ள பிரச்னையை பேசும்போது கூட சிலர் Gang Ragging செய்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமாக இருந்ததால் கிடைத்த பரிசுதான் நான் வெளியேற்றப்பட்டது” என தெரிவித்தார்.