சினிமா

‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ – திரைப்பார்வை

‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ – திரைப்பார்வை

webteam

உலகையே காப்பாற்றும் சர்வ வல்லமை படைத்த ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களையும், அலறவிட்ட மெகா வில்லன் தானோஸ் கொல்லப்பட்டனா?, பேரழிவிற்குள்ளான உலகம் காப்பாற்றப்பட்டதா?, அந்த அதிசயக் கற்களை சூப்பர் ஹீரோக்கள் கைப்பற்றினார்களா? என அவெஞ்சர்ஸ் படம் தொடங்கிய காலக்கட்டதில் இருந்து ரசிகர்களுக்குள் இருந்த எல்லாக் கேள்விகளுக்கும் விடை சொல்கிறது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’.

விதவிதமான வித்தைகளால் உலக மக்களை காப்பாற்றி வந்த சூப்பர் ஹீரோக்கள் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்ட நிலையில், தங்களை அச்சுறுத்திய தானோஸ் வேறு ஒரு கிரகத்தில் இருக்கும் செய்தி தெரியவருகிறது. அதனால், அனைவரும் ஒன்று கூடி அவனை அழிக்க கிளம்புகிறார்கள். பழைய பவரை எல்லாம் இழந்து விதிப்படி அழிவின் விளிம்பில் இருக்கும் தானோஸின் தலையை துண்டித்து கெத்துக்காட்டுகிறார்கள். ‘இந்த தானோசுக்கு என்னதான் ஆச்சு’ என வில்லனுக்காக பார்வையாளர்கள் வருத்தப்படத் தொடங்கும் அடுத்த ஐந்து ஆண்டில் இருந்து ஆரம்பிக்கிறது அவெஞ்சர்ஸின் அதிரடி ஆட்டம். பிரபஞ்சத்தின் பாதியை ஒற்றை சொடுக்கில் தானோஸ் அழித்துவிட, அதில் சூப்பர் ஹீரோ சிலரின் குடும்ப உறுப்பினர்களும் இல்லாமல் போய்விடுகிறார்கள். அவர்களோடு அழிந்து போன எல்லோரையும் மீட்க அவெஞ்சர்ஸ்க்கு தானோசிடம் இருந்த அதிசயக் கற்கள் தேவைப்படுகின்றன.அதனால், எல்லா சூப்பர் ஹீரோக்களும் டைம் டிராவல் செய்கிறார்கள். அதன் பிறகான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், சோகமாக்கும் செண்டிமெண்ட் காட்சிகளும்தான் முழு படமும்.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ தமிழ் வெர்சனுக்கு எதிர்பார்ப்பை கூட்டியதில் விஜய் சேதுபதியின் குரலுக்கு பெரும் பங்கு இருக்கிறது. எல்லா சூப்பர் ஹீரோக்களின் தலைவன் ரேஞ்சுக்கு வலம் வரும் அயர்ன் மேனுக்கு அவர் குரல் பொருந்தவேயில்லை. அதுவும், மற்ற எல்லோருக்கும் ஏற்கனவே பழக்கப்பட்ட, கச்சிதமான குரல் ஒலிக்கும்போது, இடையில் வரும் விஜய் சேதுபதியின் குரல் ஒட்டவேயில்லை. அதே நேரம், Black Widow-விற்கு டப்பிங் பேசியிருக்கும் ஆண்ட்ரியாவின் குரல் கவிதை. Iron Man, Captain America, Clint, Black Widow, Hulk, Rocket என முன்னணி சூப்பர்
ஹீரோக்கள் ஆரம்பக் காட்சிகளில் இருந்தே திரையில் தோன்றுகிறார்கள். அவர்களோடு, அவ்வப்போது, ஸ்பைடர்மேன், black panther என சமீபத்திய மார்வெல் வரவுகளும் தோன்றி சாகசம் புரிந்திருக்கிறார்கள். படத்தில், சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கேப்டன் மார்வெல்லின் எண்ட்ரி அசத்தலாக இருக்கிறது. 

அதேபோல், மார்வெல்லின் எல்லா லேடி சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக சண்டைக்கு கிளம்பும் காட்சி ‘செம்ம மாஸ்’ தனித்தனிக் கதைகளில் சாகசம் புரிந்த சூப்பர் ஹீரோக்கள் எல்லோரும் ஒரே ஃப்ரேமில் நிற்கும்போது அவர்கள் எல்லோரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். அந்த சவாலை முந்தைய பாகங்களில் செய்ததை விட இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி செய்திருக்கிறது Christopher Markus, Stephen McFeely கூட்டணி. அந்த திரைக்கதையின் பிரமாண்டம் துளியும் குறையாமல், திரைப்படமாக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஆண்டனி ருஸ்ஸோ மற்றும் ஜோ ருஸ்ஸோ.

அவெஞ்சர்ஸ் படங்களின் எல்லா பாகங்களையும் போல் இந்தப் படத்திலும் விழிவிரியும் வகையில் ஆச்சர்யப்பட வைப்பது production design. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திரையில் காட்டிய விதத்தில் அவர்களின் பணி அளப்பறியது. ஆலன் ஸ்லவெஸ்ட்ரியின் இசை பல இடங்களில் அமைதிகாத்த விதத்திலேயே ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் மாஸாகவும் ஒலிக்கிறது. அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி பாகம் இது என அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தது. அதாவது, முந்தைய பாகங்களில் தோன்றி பின் இல்லாமல் போன சில கதாபாத்திரங்களை இனி பார்க்கவே முடியாதோ என்பதுதான் அது. ஆனால், மார்வெல்லின் எல்லா சூப்பர் ஹீரோக்களையும் க்ளைமாக்ஸுக்கு முந்தைய யுத்தத்தில் இறக்கி மிரட்டியிருக்கிறார்கள் படக்குழு. ஆமா, தானோஸ்தான் முன்னாடியே அழிக்கப்பட்டுவிட்டானே பிறகு யாருடன் யுத்தம் என கேள்வி வருகிறதா?. அதை எல்லாம் 3டி திரையில் பிரமாண்டமாக பார்த்தால்தான் ரசிக்கும்படியாக இருக்கும்.

சில குறைகள் இருப்பினும் 2012-ல் தொடங்கிய அவெஞ்சர்ஸ் படத்தின் எல்லாப் பாகங்களையும் பார்த்து ரசித்த ரசிகர்கள், நெகிழ்ந்து மகிழ பல தருணங்கள் உண்டு. அதுவும், ‘அயர்ன்மேன்’ என அவர்கள் உணர்ச்சிவசப்படும்போது ஒட்டுமொத்த திரையரங்கிலும் பேரமைதி நிலவுகிறது. மேலும், முதல்முறையாக அவஞ்செர்ஸின் இந்த பாகத்தை பார்ப்பவர்கள், இதற்கு முந்தைய பாகங்களைப் பார்க்கத் தூண்டும் வகையிலும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ அமைந்திருக்கிறது.