1.03 லட்சம் மின் கட்டணமாக எடுக்கப்பட்டுள்ளது என நடிகர் அர்ஷாத் வர்ஷி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணத் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனால் கடந்த மாதங்களில் மக்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. தற்போது மின்வாரியத்தால் மின்கட்டணம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வழக்கமாக வரும் மின்கட்டணத்தை விட இரு மடங்கு கூடுதலாக மின்கட்டணம் வந்துள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டினர்.
ஊரடங்கு காரணமாக மக்கள் 18-20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதே பிரச்னை இந்தியா முழுவதும் இருப்பதாகவே தெரிகிறது. நடிகை டாப்சி, நேகா தூபியா போன்றவர்களும் மின்கட்டணம் குறித்து குற்றஞ்சாட்டி இருந்தனர். அந்த வரிசையில் தற்போது நடிகர் அர்ஷாத் வர்ஷியும் இணைந்துள்ளார்.
மின்கட்டணம் குறித்து பதிவிட்டுள்ள அவர், 1.03 லட்சம் மின் கட்டணமாக, வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மற்றொரு ட்வீட்டில் அவரது ஓவியம் குறித்த கட்டுரையை பகிர்ந்து பதிவிட்டுள்ள அவர், மக்களே என்னுடைய ஓவியத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் மின் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த மாத மின்கட்டணத்திற்கு சிறுநீரகத்தை விற்க வேண்டுமென தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள அவரது ரசிகர்களும், உங்கள் ஓவியத்தை வாங்க வேண்டுமென்றால் நாங்கள் எங்களுடைய சிறுநீரகத்தை விற்க வேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளனர்