சினிமா

திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி பிரத்யேக பேட்டி

திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது வரலட்சுமி பிரத்யேக பேட்டி

webteam

மீ டூ பிரசாரம் குறித்தும், திரைத்துறையில் இருக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்தும் நடிகை வரலட்சுமி, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

அனைவரும் புகார் தெரிவிப்பது போலவே சினிமாத்துறை இருக்கிறதா?

திரைத்துறையில் பாலியல் தொல்லை இருக்கிறது. பிரச்னையை உடனே வெளிப்படுத்தாமல் மூடி மறைத்ததே அதற்கு காரணம். இதைப்பற்றி யாரும் வெளிப்படையாக பேசவில்லை. கடந்த வருடம் பாலியல் தொல்லை குறித்து நான் பேசும்போதுக்கூட மூத்த நடிகைகள் சிலர் தனக்கு எதுவும் நடக்கவில்லை எனக்கூறி என்னை பாவம் பார்த்தனர். அதுவெல்லாம் அப்பட்டமான பொய். அதை அவர்கள் வெளிப்படுத்த விரும்பவில்லை. பயத்தினாலயோ, இமேஜுக்காகவோ அதனை அவர்கள் மூடி மறைக்கிறார்கள். நம் சமூகத்தின் பார்வையே தவறாக உள்ளது. பாதிக்கப்படுவர்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்? குற்றவாளிகள் தான் வெட்கப்பட வேண்டும்? 

மீ டூ பிரசாரம் சமூக அந்தஸ்து மிக்கவர்களை அவமானப்படுத்தும் நோக்கத்தோடு மட்டுமே இருக்கிறதா?

ஒருவர் புகழ்மிக்கவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் தவறு செய்தால் அது தவறுதான். அது யாராக இருந்தாலும் தவறே. 

தனக்கு வைரமுத்து நெருக்கடி கொடுத்ததாக கூறும் சின்மயி, அவரை பாராட்டியும், அவரது கவிதைகளை புகழ்ந்தும் ட்வீட் செய்துள்ளாரா? நெருக்கடி கொடுத்தவரை விட்டு விலகித்தானே சென்றிருக்க வேண்டும்?

நான் சின்மயியை ஆரம்பம் முதல் ட்விட்டரில் பின் தொடரவில்லை. அதனால் கடந்தக்கால கதைப்பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. ஆனால் அவர் சொல்லுவதெல்லாம் உண்மை என்றால் நான் அவருக்கு ஆதரவாக இருப்பேன். ஏனென்றால் நானும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறேன். அதன் வலி என்னவென்றால் என்னவென்பது எனக்கு தெரியும். 

பாலியல் சீண்டல் பிரச்னைகளை திரைத்துறை கண்டுகொள்ளவில்லையா? திரைத்துறையின் மூத்த நடிகர்கள் இது குறித்து பேச தயக்கம் காட்டுகிறார்களா? ஏன்?

பாலியல் தொடர்பாக பேசுவதையே கூச்சமாக பார்க்கிறார்கள். இது குறித்து ஏன் அமைதி காக்கிறார்கள் என்று புரியவில்லை. சினிமாத்துறையில் உள்ளவர்கள் பயப்படுகிறார்களா? அல்லது அவர்களுக்கு கவலை இல்லையா என தெரியவில்லை.

சினிமாத்துறையில் இருந்து அரசியலில் ஆர்வம் காட்டும் நடிகர்கள், திரைத்துறை பிரச்னையை தீர்க்காமல் தமிழகத்தை மாற்ற வேண்டுமென என களம் இறங்குவது எந்த அளவுக்கு சாத்தியமாகும் என்று கேள்வி எழுகிறதே?

நானும் அதே கேள்வியைத்தான் கேட்கிறேன். அவர்களால் முடியாது என்று இல்லை. அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

வரலட்சுமி தீவிர அரசியலில் களம் இறங்குவாரா?

நிச்சயம் அரசியலுக்கு வருவேன். பெண்களுக்காக உழைக்க வேண்டும் என்பதே எனது கொள்கை. 

சின்மயி பிரச்னைக்கு பின்னால் அரசியல் இருப்பதாக பலரும் கூறுகிறார்களே?

நான் சினிமாவில் இருந்தாலும் அதனை நான் தொடர்ந்து பின் தொடர்வதில்லை. நான் என் வேலையை நேசித்து செய்து வருகிறேன். சினிமாத்துறை பற்றி எனக்கு கவலை இல்லை. இது ஆணாதிக்கம் மிக்கது. இது மாற இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்.

திரைத்துறையில் பாதிக்கப்பட்ட பெண்கள் உங்களை அணுகலாமா? அணுகினால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பீர்களா?

என்னை அணுகுவது எளிதான காரியம் தான். அனைவருக்கும் என் வீடு தெரியும். என்னை யார் வேண்டுமானாலும் அணுகலாம். அவர்களுக்கு நிச்சயம் நான் ஆதரவு தருவேன்.