சினிமா

மீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்!

மீண்டும் நடிக்க வந்தார் பாவனா: கன்னட ’ஜானு’ ஆகிறார்!

webteam

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை பாவனா சினிமாவில் நடிக்கிறார். அவர் ’96’ படத்தின் கன்னட ரீமேக்கில் நடிக்கிறார். 

தமிழ், மலையாள, கன்னட சினிமாவில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்தவர் பாவனா. கன்னடத்தில் இவரது முதல் படத்தை தயாரித்தவர் நவீன். இவருக்கும் பாவனாவுக்கும் காதல் மலர்ந்தது. பல வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். பின் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களின் திருமணத்துக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத்  தொடர்ந்து கடந்த வருடம் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் உள்ள பாவனாவின் வீட்டில் நடந்தது.

பின்னர் கடந்த வருடமே திருமணம்  நடைபெறுவதாக இருந்தது. நவீனின் தாயார் இறந்ததால் திருமணம் தள்ளிபோனது. இந்நிலையில், இந்த வருடம் ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

இந்நிலையில் சினிமாவில் நடிக்காமல் இருந்த பாவனா, இப்போது மீண்டும் நடிக்க திரும்பி இருக்கிறார். தமிழில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான ’96’, கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. இதில் கணேஷ், ஹீரோவாக நடிக்கிறார். பாவனா, ’ஜானு’வாக நடிக்கிறார். பிரீத்தம் குப்பி இயக்குகிறார். 

இதுபற்றி பாவனா கூறும்போது, ’பொதுவாக எனக்கு ரீமேக் படங்களில் நடிப்பதில் விருப்பம் இல்லை. பல படங்களை தவிர்த்திருக்கிறேன். இந்தப் படத்தின் ஒரிஜினலை ஏற்கனவே பார்த்துவிட்டேன். இது அனைத்து மொழிக்குமான கதை. எல்லோருக்குமான கதை. அதனால், நடிக்க சம்மதித்தேன். அதோடு 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கேட்டதால் ஒப்புக்கொண்டேன். கணேஷும் நானும் ஏற்கனவே இணைந்து நடித்துள்ளோம். இப்போது மீண்டும் அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது’ என்றார்.