சினிமா

மதங்களைவிட மனித மகத்துவத்தை உணர்த்தும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர்

மதங்களைவிட மனித மகத்துவத்தை உணர்த்தும் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ டீசர்

sharpana

விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

’மாமனிதன்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதி - சீனுராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ள 'மாமனிதன்’ படத்தினை யுவன்ஷங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக படத்தை வெளியிடாமல் இருக்கிறது படக்குழு.இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றியும் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘மாமனிதன்’ படத்தை தயாரித்திருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஏற்கனவே, படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது. ராதாகிருஷ்ணன் என்ற ஆட்டோ டிரைவராக குறியீடு பெயரோடு நடிப்பில் கவனம் ஈர்க்கிறார் விஜய் சேதுபதி.

இஸ்லாமியருக்கு உதவுவதும்... அவர்களுடன் நட்புணர்வுடன் தாயாய் பிள்ளையாய் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவதும்.... கிறிஸ்தவர்களிடம் ஆசி வாங்குவதும்... கும்பமேளாவில் ஆட்டம் போடுவதும் என அனைத்து மதங்களையும் மதித்து ஒற்றுமையுடன் வாழும் மாமனிதனாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. டீசரே ’மாமனிதன்’ என்ற படத்தலைப்பின் காரணத்தையும் விளக்குகிறது; புரிந்துகொள்ள வைக்கிறது.