சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44 ஆவது ஆண்டு விழா மற்றும் அகரம் அறக்கட்டளை மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 14 வருடங்களாக அகரம் கல்வி அறக்கட்டளை மூலமாக 5,200 மாணவர்கள் கல்வி உதவி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடந்த வருடம் அகரம் அறக்கட்டளையின் சார்பாக வேலைக்குச் சென்ற மாணவர்கள் உரையாற்றினார். அதன் பின்னர் மேடையில் பேசிய நடிகர் சூர்யா, “மாற்றத்திற்கு காரணமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 44 ஆவது வருடமாக சிவகுமார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. ஒருவருக்கு உதவி செய்தால், அனைவருக்கும் உதவியாக இருக்கும். எங்க ஆத்தா சொன்னதுதான் எங்களது அப்பாவிடம், ‘ஒருத்தருக்கு 120 ரூபாய் கொடுக்கச்சென்றபோது ஒவ்வொரு வருடமும் உன்னால் கொடுக்க முடியுமா.. இப்ப கொடுத்துடுவே.. அடுத்த வருடமும் கொடுத்துடுவியா... எவ்வளவு கொடுக்கமுடியும்னு யோசித்துவிட்டு வருடா வருடம் கொடுக்கிறமாதிரி பண்ணு’ என்று எங்க ஆத்தா சொன்னதுதான். அப்படி சிறிய தொகையுடன் ஆரம்பித்து 44 ஆண்டுகள் தொடர்ச்சியாக சென்றுக் கொண்டிருப்பதற்கு ஆத்தா காட்டிய வழிகாட்டுதல்தான் காரணம்.
தன்னலம் பார்க்காத நிறைய தன்னார்வலர்களால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றது. அரசுக்கும் பாராட்டு தெரிவிக்க வேண்டும். திருவண்ணாமலையின் அருகே உள்ள மலை கிராமங்களில் சில ஆசிரியர்கள் தங்கி மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறார்கள். அப்படி ஒரு ஆசிரியர், அகரம் மாணவர்களை பற்றி பாராட்டி பேசினார். அகரம் மாணவர்கள் தனித்தன்மையாக இருப்பதாக பல ஆசிரியர்கள் கூறுகிறார்கள். வாழ்க்கை எப்போது முழுமை அடைகிறது என்றால், இது போன்ற நிகழ்வுகளால் தான். அகரம் மாணவர்களுக்கு தலைமை பண்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாதம் 3000 பார்க்காத குடும்ப சூழலில் இருந்து வரும் மாணவர்கள் தான் பயன் பெறுகிறார்கள். கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள். வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். சாதி, மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் மாறினால், வீடு மாறும்; சமுதாயம் மாறும்; குடும்பம் மாறும். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியருக்கும் நான் தலை வணங்குகிறேன். கல்வியை பல சவால்களுக்கு மத்தியில் ஆசிரியர்கள் சொல்லித் தருகிறார்கள். சரியான சமமான கல்வி கொடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். மாணவர்களை பள்ளிக்கு வர வைப்பது எவ்வளவு கஷ்டம். கடந்த மூன்று வருடத்தில் ஒரு லட்சம் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம்.
அகரம் அறக்கட்டளை தனித்து இயங்கும் வகையில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஜவ்வாது மலை அருகே 30 பள்ளிகளை மேம்படுத்தியுள்ளோம். அகரம் தன்னார்வலர்களுக்கு எனது பாராட்டுகள். காலை சீக்கிரம் எழ வேண்டும், நான் இப்போதுதான் கடைபிடிக்க தொடங்கியுள்ளேன். ஒருநாளைக்கு 86,400 நொடிகள் உள்ளன. அதில் பத்து செகண்ட் ஒருவர் வீண் சொல், பழிச்சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணாக்கக்கூடாது. ஒருவரை பழி சொல்லுதல், எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும்.
5,200 மாணவர்கள் அகரத்தால் பயன் பெற்றுள்ளனர். அகரம் என்பது எங்களுடையது கிடையாது... உங்களுடையது... நம்மளுடையது.. தனியாக செயல்படுவதை விட அரசாங்கத்தோடு இணைந்து செயல்படுவதால் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவியை கொடுக்க முடிகிறது. வாழ்க்கைக்கு கல்வி அவசியம். வாழ்க்கை கல்வி அவசியம். மார்க் எடுப்பது மட்டும் கல்வி அல்ல” என்று தெரிவித்துள்ளார்.