தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு, ‘கலைஞர் 100’ என்ற விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்துவதற்கான அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்ததால் அந்நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே வந்தது. இந்நிலையில், நேற்று மாலை சென்னை கிண்டியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் நடிகர்கள் ரஜினி, கமல், சூர்யா, வடிவேலு உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் ரஜினிகாந்த் கலைஞரோடு தனக்கு இருந்த நெகிழ்ச்சியான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி அவர் பேசுகையில், “வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அப்போது ஒரு நடிகர் ஓட்டுப்போட்டுவிட்டு வெளியே வந்தபோது, பத்திரிகையாளர்கள் ‘யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள்’ என்று கேட்க, அவர் இரட்டை இலை என்று சொல்லிவிட்டார். அது ட்ரெண்டாகிவிட்டது. அன்று மாலை அந்த நடிகர்தான் கலைஞரோடு படம் பார்க்க போக வேண்டும்.
ஆனால், எப்படிப்போவது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டார். ஆனால், அவர் வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். சரியென அவர் தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க.. காய்ச்சல்னு சொன்னீங்களாமே.. சூரியன் பக்கத்துல உட்காருங்க’ என்றார் கலைஞர். இங்கே அந்த நடிகரே நான்தான்” என்றுள்ளார்.
முன்னதாக பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ரஜினி வாக்களித்து விட்டார் என்று செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.