சினிமா

‘இரவின் நிழல் பட வருமானம் திரைப்பட உலகையே திருப்பிப் போடும்’ - பார்த்திபன்

‘இரவின் நிழல் பட வருமானம் திரைப்பட உலகையே திருப்பிப் போடும்’ - பார்த்திபன்

webteam

‘இரவின் நிழல்’ படத்தின் வருமானம் திரைப்பட உலகத்தை திருப்பி போடும் என்றும், குடும்பங்கள் சேர்ந்து ஜாலியாக பார்க்கும் படங்களை தற்போதைக்கு எடுக்க விரும்புகிறேன் என்றும் நடிகர் பார்த்திபன் பேட்டியளித்துள்ளார்.

‘ஒத்த செருப்பு அளவு 7’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்தப்படம் 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை இந்தப்படம் பெற்றுள்ளது. வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிகிடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 15-ம் தேதி வெளியான இந்தப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ‘இரவின் நிழல்’ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் பார்த்திபன், நடிகை பிரிகிடா ஆகியோர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடிகர் பார்த்திபனை கண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோயில் முன்பு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அப்போது அதிகமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ ‘இரவின் நிழல்’ படத்திற்கு கொடுத்த அமோகமான ஆதரவுக்கு நன்றி. தனஞ்செயன் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு படம் வெற்றியடைய வேண்டியதாக தெரிவித்தார். எனக்கும் மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. முதலில் என்மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. என்னை மீறி மிகப்பெரிய சக்தி உள்ளது. அந்த தேடல் இருந்து கொண்டே உள்ளது. அதை தேடுவதை மிகப்பெரிய வேலையாக வைத்துள்ளேன். நான் 11 வருடங்களுக்கு மேல் சபரிமலை சென்றுள்ளேன். திருப்பதிக்கு சென்றுள்ளேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீனாட்சி அம்மனை பார்க்க வருவேன்.

மீனாட்சியம்மனை பார்த்துவிட்டு கோயிலிலில் உட்கார்ந்து காதல் கவிதை எழுதுவேன். மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்துவிட்டு கிறுக்குத்தனமாக கவிதை எழுதுவேன். ‘இரவின் நிழல்’ என்னுடைய முயற்சி அனைத்தும் போட்டு எடுத்த படம். ‘இரவின் நிழல்’ படம் வெற்றியடைந்துள்ளது. மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால் படம் மாபெரும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்றால் கைவிட்டுபோன ஒன்று என்ன செய்வதென்று தெரியாது.

அதற்கு நம் மனதை உள்முகமாக நகர்த்தி சின்ன பிரார்த்தனை செய்ய வேண்டி உள்ளது. விருதுகளை குவிக்க உள்ள படம் இது. இந்தப் படத்தின் வருமானம் தமிழ் திரைப்பட உலகத்தை திருப்பி போட்டு விடும். மிக மிக வித்தியாசமான படங்களுக்கு மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பார்கள் என்ற ஆச்சரியத்தை கொடுத்த படம் இரவின் நிழல்.

ரஜினி சார் படம் பார்த்து U made on history என பாராட்டி உள்ளார். நாளை ரஜினி சாரையும், இன்று கமல் சாரையும் பார்க்க உள்ளேன். சினிமவில் மிகப்பெரிய உயரத்தை எட்டிய கமல், ரஜினி போன்றோரின் வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய சந்தோஷம். அவர்களின் வாழ்த்துகளை பாசி மணி ஊசி மணி போல கோர்த்து கழுத்தில் போடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி.

பெட்டி நிறைய் பணம் இருந்நால் இங்கேயே பூஜை போட்டு விடுவேன். பெட்டி நிறைய பணம் இருந்தவர்களை கண்டுபிடித்து காலி செய்து படம் எடுக்கலாம் என உள்ளேன். அப்படியொரு இளிச்சவாயன் கிடைக்கவில்லை என்றால் நானே தயாரிப்பாளர் ஆகிவிடுவேன். ஏனென்றால் என்னை விட சிறந்த இளிச்சவாயன் இல்லை.

தற்போதைக்கு குடும்பங்கள் சேர்ந்து பார்க்கும் வகையில் மெதுவாக ஜாலியாக இருக்கும் படங்களை எடுக்க உள்ளேன். நிறைய கதைகள் உள்ளன. யதார்த்தமாக சொல்ல வேண்டிய விஷயத்தை அது அடல்ஸ் ஒன்லி என்கிற சூழ்நிலையாக மாறி விட்டது. சிங்கிள் ஷாட் படம் என்பதால் எங்கேயும் வெட்டாமல் எடிட் செய்யாமல் ஒரு சில இடங்களில் மீயுட் செய்தோம். அது தான் எங்களுக்கு தெரிந்த விஷயம் தானே, எதுக்கு மியூட் செய்தீர்கள் என பெண்கள் கேட்டார்கள்.

அடுத்தமுறை "ஏ" இல்லாமல் யூ, யூ மைனஸ் படங்களை எடுப்பேன். மதுரையை மையமாக வைத்து படைக்க புரொடியூசர் தொழிலதிபர் யாராவது கிடைப்பார்களா என பார்க்கிறேன். சமுத்திரக்கனி, சசிக்குமார் மதுரையை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அவர்களிடம் மதுரையை பற்றி நல்ல ஸ்கிரிப்ட் இருந்தால் அதை வைத்து படம் எடுப்பேன் என தெரிவித்தார்.