சினிமா

"அவர் கற்றுக்கொடுத்த பாடத்தையே இன்றும் பின்பற்றுகிறேன்”- உணர்ச்சிவசப்பட்ட கார்த்தி

"அவர் கற்றுக்கொடுத்த பாடத்தையே இன்றும் பின்பற்றுகிறேன்”- உணர்ச்சிவசப்பட்ட கார்த்தி

சங்கீதா

‘பருத்தி வீரன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்து, இன்றோடு 15 வருடங்கள் முடிந்துள்ளநிலையில், நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் முதல் வாரிசான சூர்யா, ஏற்கெனவே தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருந்தநிலையில், அவரின் 2-வது வாரிசான கார்த்தி, முதலில் மணிரத்னத்திடம் ‘ஆயுத எழுத்து’ படத்தில் உதவி இயக்குநராகவே பணிபுரிந்தார். பின்னர், இயக்குநர் அமீரின் இயக்கத்தில், கிராமத்து காதல் கதையான ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தி அறிமுகமானார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, இந்தப் படத்தில், முதலில் சண்டியராகவும், அதன்பிறகு காதலில் உருகுபவராகவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் கார்த்தி.

இந்தப் படம் தமிழ் சினிமா உலகில், புதிய கோணத்தை அளித்தது. வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘பருத்தி வீரன்’. இந்தப் படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் முடிந்துள்ளநிலையில், படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

'பருத்திவீரன்’ திரைப்படத்தின் மூலம் எனது திரைவாழ்க்கை தொடங்கியதை நான் ஆசிர்வாதமாக நினைக்கிறேன். என்னுடைய ஒவ்வொரு அசைவும் அமீர் சாரால் வடிவமைக்கப்பட்டு, கற்பிக்கப்பட்ட ஒன்று. எல்லாப் புகழும் அமீர் சாரையே சேரும். அதன்பிறகு பல பாடங்கள் நான் கற்றாலும், வேலையை ஈடுபாட்டோடு ரசித்துச் செய்ய வேண்டும் என்று அவர் கற்றுக் கொடுத்த முறையை தான் இன்றும் பின்பற்றி வருகிறேன். இந்த அழகான பாதையை வகுத்துக் கொடுத்த அமீர் சார், ஞானவேல், அண்ணா, என்னுடைய அன்பான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்” இவ்வாறு கார்த்தி தெரிவித்துள்ளார்.