’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடலைப் பாடிய நடிகரும் பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
பழம்பெரும் நடிகரும் நாட்டுப்புற பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். 87 வயதாகும் அவர், சிவாஜி நடிப்பில் 1954 ஆம் ஆண்டு வெளியான ‘ரத்த பாசம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து ‘கவலை இல்லாத மனிதன்’, ’தேன் கிண்ணம், ’நாடோடி’ ’நாளை நமதே, ‘தெய்வ மகன்,‘நேற்று இன்று நாளை,’சட்டம் ஒரு இருட்டறை, ‘நான் சிகப்பு மனிதன், ‘போக்கிரி ராஜா’,‘சத்யா’ என்று சிவாஜி,எம்.ஜி.ஆர், ரஜினி,விஜயகாந்த், கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் இதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதிகமாக எம்.ஜி.ஆர் படங்களில்தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் டி.கே.எஸ் நடராஜனை புகழின் உச்சிக்கு கொண்டுச் சென்றது 1984 ஆம் ஆண்டு வெளியான ‘வாங்க மாப்பிள்ளை வாங்க’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் பாடிய ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடல்தான். தமிழகம் முழுக்க ஹிட் அடித்த இப்பாடல் இன்னும் கிராமங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கடந்த 2006 ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த ’வாத்தியார்’ படத்தில் ’என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி’ பாடலை ரீமேக் செய்தனர். ரீமேக் பாடலையும் டி.கே.எஸ் நடராஜனே பாடியதோடு அர்ஜுனோட நடனமும் ஆடி ரசிக்க வைத்தார். இந்நிலையில், இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தந்துள்ளார்.