சினிமா

கல்கி உருவாக்கிய ’துறுதுறு’ கதாபாத்திரம்.. ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி அவ்வளவு ஸ்பெஷல்?

கல்கி உருவாக்கிய ’துறுதுறு’ கதாபாத்திரம்.. ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி அவ்வளவு ஸ்பெஷல்?

ச. முத்துகிருஷ்ணன்

கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒட்டுமொத்த கதையும் வந்தியத்தேவன் இடம் துவங்கி அவனிடமே தான் நிறைவு பெறும். கதையின் மூலப்பாத்திரமான அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் அறிமுகமாவதற்கு முன்னராகவே ஒரு முக்கிய கதாபாத்திரம் அறிமுகமாகும். கதையில் பல சமயங்களில் எதிர்பாராத திருப்பங்களை நிகழ்த்துவதும் நிகழ வேண்டிய திருப்பங்களை சில சமயம் தடுத்து நிறுத்துவதும்தான் அந்த பாத்திரத்தின் வேலை. சூழ்ச்சிகளை சாமர்த்தியமாய் உடைக்கும் செய்தி பரிமாற்றத்தை காற்றைப்போல தடயமே இல்லாமல் நிகழ்த்தும் அந்த கதாபாத்திரம்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. வந்தியத்தேவனை சந்தித்த தருணம் முதல் குறும்பு செய்து அவனோடு பயணித்து, வீரதீர சூரனான அவனும் சில சமயம் சிக்கலில் மாட்டும்போது அவனை காப்பாற்றும் கதாபாத்திரமாக ஆழ்வார்க்கடியான் நம்பி திகழ்வார்.

ஆழ்வார்க்கடியான் நம்பி - வந்தியத்தேவன் நட்பு:

எல்லோரிடமும் சைவ - வைணவ சண்டை போட்டு களேபரம் செய்யும் ஆழ்வார்க்கடியான் நம்பி, வந்தியத்தேவனைப் பார்த்த கணத்திலேயே நண்பனைப் போல பழக நினைப்பார். இருப்பினும் வந்தியத்தேவன் சந்தேக எல்லைக்குள்ளேயே நம்பியை வைத்திருப்பார். குறைவான விஷயங்களையே பேச நினைப்பார். ஆனால் நம்பியோ, காட்டாற்று வெள்ளம் போல பேசிக் கொண்டே இருப்பார். அவற்றில் எது உண்மை, எது கட்டுக்கதை என்பதை வந்தியத்தேவன் புரிந்து கொள்வதற்குள் அடுத்த கதைக்கு நம்பி தாவியிருப்பார். கதை முழுக்க பிறரிடம் பேசியே உண்மைகளையும் ரகசியங்களையும் தெரிந்துகொள்ளும் வந்தியத்தேவனுக்கு, நம்பியின் ரகசியத்தை தெரிந்துகொள்வதுதான் உண்மையிலேயே கடினமான காரியமாக இருந்து இருக்கும். அவனே சோர்ந்து “நம்பி எதையே செய்து விட்டு போகிறார்! போகட்டும்” என்று விரக்தியுடன் சொல்லுமளவுக்கு புலிப்பாய்ச்சலில் அந்த கதாபாத்திரம் பயணிக்கும்.

ஏன் ஆழ்வார்க்கடியான் நம்பி அவ்வளவு ஸ்பெஷல்?

ஒரு காமெடி காட்சி உங்களுக்கு நினைவு இருக்கிறதா? நவரச நாயகன் கார்த்திக்-க்கு போக்கு காட்டி தலைதெறிக்க ஓடி வந்து தனது வீட்டை திறந்து பார்ப்பார் கவுண்டமணி. அங்கு ஹாயாக ஒரு தட்டில் சாப்பாட்டை வைத்து கார்த்தி ருசித்து கொண்டிருப்பார். கவுண்டமணி அப்செட்டாகி கார்த்தியை வெறித்து பார்ப்பார். கிட்டத்தட்ட ஆழ்வார்க்கடியான் நம்பிக்கும் வந்தியத்தேவனுக்கும் இதே சீன் தான் நாவலில் பல இடங்களில் அப்படியே நடக்கும். காடு, மலை என எல்லா தடைகளையும் தாண்டி பல பாதுகாப்பு அரண்களை உடைத்து ரகசியத்தை தெரிந்துகொள்ள வந்தியத்தேவன் போராடி நுழையும் இடத்தில் எல்லாம் மிக இலகுவாக நம்பி அவருக்கு முன்னரே அமர்ந்திருப்பார். வந்தியத்தேவனுக்கு அந்த நேரத்தில் தலையே சுற்றி விடும். இதற்கு நாவலில் ஒரு காட்சியை உதாரணமாக சொல்லலாம்.

தனது நண்பன் கந்தமாறனுக்கு போக்கு காட்டி, கடம்பூர் மாளிகை காவலர்களுக்கு தண்ணி காட்டி, சோழ பேரரசின் அரியணையைக் கைப்பற்ற பழுவேட்டரையர் சிற்றரசர்களுடன் நடத்தும் ரகசிய சதி ஆலோசனையை கேட்க கடும் இன்னல்களை சந்தித்து வந்திருப்பார் வந்தியத்தேவன். அவர் நினைத்தபடி ஆலோசனையும் துவங்கும். அப்போது இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் பகுதியில் மேல்மாடத்தில் நம்பியின் தலை மட்டும் இருக்கும். யாரோ வெட்டி அங்கு ஒட்டி வைத்தது போல.! நடுங்கிப் போவார் வந்தியத்தேவன். அடுத்து கண்களை அந்த தலை அசைக்கும்போது தான் வந்தியத்தேவனுக்கே தெரியவரும். நம்பி தான் அங்கு இருக்கிறார். உயிரோடு இருக்கிறார் என்று! ஆனால் நம்பி ஏன் இங்கு வந்தார்? இவ்வளவு தடைகளையும் மீறி எப்படி இங்கு வந்தார் என்று பல சிந்தனைகள் வந்தியத்தேவன் உள்ளத்தில் எழும். அவரது வருகைக்கான காரணம் நாவலின் பிற்பகுதியில் விளக்கப்படும்.

இருப்பினும் எப்படி வந்தார் என்பது பற்றியோ, அல்லது இனி கதையில் பல்வேறு சூழல்களில் அதிரடியாக அவர் எப்படி வருவார் என்பது பற்றியோ கதையில் எங்கும் சொல்லப்பட்டிருக்காது. ஜாக்கிசான் கதையில் “ஹாய் ஜாக்கி!” என்று சொல்லும் ஜூலியாகவே நம்பி பாத்திரம் வந்தியத்தேவனுக்கு அதிர்ச்சி தரத்தக்க வகையில் அடிக்கடி தோன்றும். அதுவே அப்பாத்திரத்தின் உச்சபட்ச ஸ்பெஷல்.

கதையில் நம்பியின் தாக்கம்:

வந்தியத்தேவனுக்கு விடைகொடுத்த கையோடு சோழ இளவரசி குந்தவையையும், சுந்தர சோழரின் அண்ணி செம்பியன் மாதேவியையும் பார்க்கச் செல்வார் நம்பி. வந்தியத்தேவனை சந்தித்த போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் விவரிப்பார். சின்னப் பழுவேட்டரையர் முன்னிலையில் சுந்தர சோழரைப் பார்த்து “நீங்கள் அபாயத்தில் இருக்கிறீர்கள்” என்று வந்தியத்தேவன் சொல்லியதையும் சேர்த்து சொல்லி முடிப்பார் நம்பி. அடுத்து குந்தவை, “அந்த வீரனை மீண்டும் பார்த்தால் உடனே இங்கு அழைத்து வாருங்கள்” என்று சொல்ல, அதற்கு நம்பி “அவனே உங்களை தேடி வருவான் இளவரசி” என்று சூசகமாக சொல்வார். குந்தவை மனதில் வந்தியத்தேவன் பற்றி பிரமாண்ட பிம்பம் எழுந்து அவனிடம் காதல் வயப்பட முதற்காரணமாக நம்பிதான் இருப்பார்.

கதையில் தனது உயிருக்கு ஆபத்து வரும் போது உடல்வலிமையை சில சமயம் பிரயோகப்படுத்திய போதிலும், வந்தியத்தேவன் சிக்கலில் சிக்கி மீட்கத் துணியும் போது ஒருவித குறும்புத்தனம் மற்றும் சாமர்த்தியம் இரண்டையும் கலந்து வெளிப்படுத்தி இக்கட்டில் இருந்து விடுவிக்கும் கதாப்பாத்திரமாக நம்பி இருப்பார். இந்த ஆள் நம்மை காப்பாற்றுகிறாரா அல்லது அடுத்த வம்பில் மாட்டிவிடப் போகிறாரா என்று வந்தியத்தேவன் குழம்பிப் போவார். சரி., ஆபத்தில் இருந்து காப்பாற்றிய பின் வந்தியத்தேவனுடன் நம்பி பயணிப்பாரா என்றால் இல்லை! மின்னல் போல மாயமாகி விடுவார். அடுத்த ஆபத்தில் தான் அடுத்த சந்திப்பு! பாவம் வந்தியத்தேவன்! வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்கிரமாதித்தன் போல நம்பியுடன் பயணிப்பார்.

நயவஞ்சகம் கொண்ட நந்தினி தனது தங்கை என்று வந்தியத்தேவனிடம் பார்த்த முதல் சந்திப்பிலேயே சொல்லி விடுவார் நம்பி. ஆனால் அதை வந்தியத்தேவன் நம்ப மாட்டான். அதற்கு அவர் சொன்ன கதையும் நம்பும் படியாக இருக்காது என்பதுவும் ஒரு காரணம். உயிருக்கு உயிரான நண்பனான ஆதித்த கரிகாலன் கூட நந்தினி பற்றிய விஷயத்தை வந்தியத்தேவனிடம் பகிர்ந்திருக்க மாட்டான். இருப்பினும் நம்பி கொடுத்த எச்சரிக்கையால் தான் நந்தினியை மிக கவனமாக அணுகுவான் வந்தியத்தேவன். நம்பி மட்டும் அந்த எச்சரிக்கையை கொடுத்திருக்காவிட்டால், வேறு மாதிரியான முடிவுகள் கூட அரங்கேறியிருக்குமோ?! என்னவோ?!

உண்மையில் யார் இந்த நம்பி?

கல்கியின் கதையைப் பொறுத்தவரை ஆழ்வார்க்கடியான் நம்பி சோழப் பேரரசின் முதல் மந்திரி அநிருத்த பிரம்மராயரின் ஒற்றன். அவ்வளவுதான்! ஆனால் கதையின் போக்கையே பலசமயம் திசைதிருப்புமளவு வலுவாக இப்பாத்திரத்தை கல்கி வடிவமைத்திருப்பார். தன்னைப் போன்ற பிற ஒற்றர்களுடன் போட்டி பொறாமை காரணமாக சண்டை, சைவ வைணவ சண்டை, வந்தியத்தேவனுக்கு நட்பு, அவ்வப்போது ஆபத்தில் உதவிகள், அரச குடும்பத்திற்கு முன் பணிவு, அதேசமயம் ஒற்று சொல்லும்போது உண்மையை சொல்லும் திடம் என எல்லா வகையில் கச்சிதமான வார்ப்பாகவே அப்பாத்திரம் கதையில் பயணிக்கும். இருப்பினும் இவ்வளவு அழுத்தமான தனது தடத்தை பதிக்கும் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி கல்கியின் கற்பனை கதாப்பாத்திரம்தான். உண்மையில் இந்த நபர் இருந்ததற்கான எந்த ஆதாரங்களும் தற்போது வரை கிடைக்கவில்லை.

கற்பனையிலேயே இத்தகு மாண்பையும் மகத்துவத்தையும் கொண்ட ஒரு கதாபாத்திரத்தை, நிஜத்தில் இருந்தவரது கதையைப் போல செதுக்கியிருக்கிறார் கல்கி. இருப்பினும் இந்த ஆழ்வார்க்கடியான் நம்பி கல்கி உருவாக்கிய இரண்டாவது சிறந்த கதாபாத்திரம்தான்., அப்படியென்றால் முதலிடம்??

வேறு யாராக இருக்க முடியும்!? நந்தினி தான்!

ஏன் அவர்தான் கல்கியின் தலைசிறந்த கற்பனை கதாபாத்திரம்? அடுத்த தொகுப்பில் பார்க்கலாம்!

புதிய தலைமுறை இணையதளத்தில் பொன்னியின் செல்வன் தொடர் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. முந்தைய பாகங்களை படிக்க: