சினிமா

ஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்

ஐம்பது அடி கட்-அவுட் சேதம் - விஜய் ரசிகர் மன்றத்தின் மீது புகார்

webteam

கேரளாவில் பால் அபிசேகம் செய்வதாக கூறி கட்-அவுட்டை சேதப்படுத்திய விஜய் ரசிகர் மன்றத்தின் மீது தியேட்டர் உரிமையாளர் புகார் அளித்துள்ளார். 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளையும் மீறி தீபாவளியன்று வெளியானது. இதற்காக விஜய் ரசிகர் மன்ற குழுவினர் பல்வேறு பகுதிகளிலும் திரையரங்குகளிலும் கட்-அவுட் வைப்பதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். தமிழ் ரசிகர்களை மீறி கேரளாவில் 175 அடி கட் அவுட் வைத்து கேரள ரசிகர்கள் சாதனை படைத்தனர்.

இந்நிலையில், கேரளாவில் உள்ள அட்டிங்கல் பகுதி மம்மாம் பகுதியில் கங்கா தியேட்டர் காம்ப்ளக்ஸ் உள்ளது. இங்கு ‘சர்கார்’ படத்திற்காக 50 அடி கட்-அவுட் வைக்கப்பட்டிருந்தது. 

நேற்று காலை 5 மணியளவில் விஜய் ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட இருந்தது. அப்போது, பால் அபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள் சாரத்தின் மீது ஏறியுள்ளனர். 

இதையடுத்து காட்சி ஆரம்பித்த சிலமணி நேரங்களில் 50 அடி கட்-அவுட் சரிந்து விழுந்தது. இதில், தியேட்டரின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருச்சக்கர வாகனங்களும் தியேட்டரின் கண்ணாடி மற்றும் சுவர்கள் சேதமடைந்தன.

இதையடுத்து கட்-அவுட் சரிந்து விழுந்ததிற்கு காரணம் சாரத்தின் மீது ஏறி பால் அபிஷேகம் செய்ததே என விஜய் ரசிகர் மன்றத்தின் மீது திரையரங்கத்தினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். 

இதுகுறித்து திரையரங்க உதவி மேலாளர் பத்மகுமார் கூறுகையில், ரசிகர்கள் சங்கம் எங்கள் தியேட்டரில் ஒரு அங்கமாக இல்லை எனவும் அவர்கள் கட்-அவுட் வைப்பதற்கு எங்களிடம் அனுமதி வாங்கவில்லை எனவும் குறிப்பிட்டார். 

மேலும், கட்-அவுட் திரையரங்க வளாகத்திற்கு வெளியில் இருந்தது எனவும் அதிருஷ்டவசமாக கட்-அவுட் சரிந்து விழும்போது அனைவரும் தியேட்டருக்கு உள்ளே இருந்ததாகவும் குறிப்பிட்டார். 

சேதாரங்களுக்கு உரிய இழப்பீடை செலுத்துவதாக இருந்தால் ரசிகர் மன்றத்தின் மீது அளித்த புகாரை திரும்ப பெறுவோம் எனவும் தெரிவித்தார். 

இதுகுறித்து அட்டிங்கல் டி.எஸ்பி அனில்குமார் கூறுகையில், இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படவில்லை எனவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.