தனது அம்மாவைக் குத்திக்கொன்ற டார்ஜான் நடிகர் ரோன் எல்லியின் மகன் போலீசார் சுட்டதில் உயிரிழந்தார்.
1960-களில் வெளியான ’டார்ஜான்’ என்ற அமெரிக்க டிவி தொடரில் நடித்து பிரபலமானவர், ரொனால்ட் பியர்ஸ் எல்லி என்கிற ரோன் எல்லி. நாவலாசிரியருமான இவர், கிரை ஆப் த பிளாக் வால்வ்ஸ், டாக் சாவேஜ்: த மேன் ஆப் ப்ரான்ஸ், கிட்கிஃப்ட் உட்பட பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 81 வயதாகும் இவர், தனது மனைவி வலேர் லுண்டீனுடன் (62) அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சன்டாபார்பராவில் வசித்து வந்தார். அவர்கள் மகன் கேமருனும் (30) அவர்களுடன் வசித்து வந்தார்.
(மனைவியுடன் டார்ஜான் நடிகர் ரோன் எல்லி)
கடந்த புதன்கிழமை கேமருன் தனது அம்மாவைக் கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதுபற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து லுண்டினை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கேமருனை போலீசார் தேடினர். வீட்டின் அருகிலேயே மறைந்திருந்த அவரை நோக்கிச் சுட்டதில் கேமருனும் உயிரிழந்தார்.
(கொலை நடந்த நடிகர் ரோனின் வீடு)
இந்த சம்பவம் நடந்தபோது நடிகர் ரோன் வீட்டில்தான் இருந்துள்ளார். அவருக்கு காயம் எதுவுமில்லை. கேமருன் எதற்காக அம்மாவைக் கொன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.