வணிகம்

தினமும் மாறப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை?

தினமும் மாறப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை?

Rasus

சர்வதேச சந்தையில் நிலவுகிற கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கூடிய சீக்கிரம் அமல்படுத்த இருப்பதாக தெரிகிறது. தற்போது விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.

நாட்டில் உள்ள 95% சதவீத பெட்ரோல் பங்குகளை கட்டுப்படுத்தும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் இது தொடர்பாக விரைவில் முடிவெடுத்து அறிவிக்க உள்ளன. இது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அந்த நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளன.

நாட்டில் உள்ள 53,000 பெட்ரோல் பங்குகளில் விலை மாற்றும் ஆட்டோமேஷன் முறை அமலில் உள்ளதால் எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை எளிதாக அமல்படுத்த முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக வலைதளங்களும் இருப்பதால் விலை மாற்றத்தையும் சுலபமாக பெட்ரோல் பங்குகளுக்கு தெரிவிக்க முடியும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த முறை அமலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை தினமும் சில பைசாக்கள் குறையும் அல்லது ஏறும். பெரிய மாற்றங்கள் இருக்காது. இதனால் வாடிக்கையாளர்களும் அதிர்ச்சியடைய மாட்டார்கள், என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.