வணிகம்

பணமதிப்பு நீக்கத்தால் தேக்கமில்லை - உலக வங்கி

பணமதிப்பு நீக்கத்தால் தேக்கமில்லை - உலக வங்கி

webteam

2017-ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சி அடையும் என உலக வங்கி கணித்துள்ளது.

பணமதிப்பு நீக்கத்தால் இந்தியாவின் வளர்ச்சி தேக்கமடையவில்லை என்பதையே இது காட்டுகிறது என்றும் உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவின் 6.8 சதவீத வளர்ச்சியாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக வங்கியின் மேம்பாட்டுத் துறை செயல்பாடுகளுக்கான இயக்குநர் அய்ஹான் கோஸ் இதுகுறித்து குறிப்பிடும்போது, ’ஜனவரி மாதத்தில் இந்தியாவின் வளர்ச்சி புள்ளிகளை 0.4 சதவீதம் வரை உலக வங்கி திருத்தி வெளியிட்டிருந்தது. சீனாவின் வளர்ச்சியை பொறுத்தவரையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. 2017-ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சி 6.5 சதவிகிதமாக உள்ளது. இது 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 6.3 சதவிகிதமாக மாறலாம்’எனக் கூறியுள்ளார்.

உலக வங்கியின் சமீபத்திய பொருளாதார அறிக்கையின்படி, 2018-ம் ஆண்டில் இந்தியாவில் வளர்ச்சி 7.5 சதவீதமாகவும், 2019-ம் ஆண்டில் 7.7 சதவீதமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியிட்ட கணிப்பைவிட இந்த இரண்டு ஆண்டுகளிலும் 0.3 மற்றும் 0.1 சதவீத வளர்ச்சி குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

2016-ஆம் ஆண்டில் சிறப்பான பருவ நிலை மற்றும் மழைப்பொழிவின் காரணமாக இந்தியாவின் விவசாய துறை செயல்கள் மற்றும் கிராமப்புற நுகர்வு சிறப்பாக இருந்தன. இதன் காரணமாக கட்டமைப்பு முதலீடுகள் அதிகரித்தன. இதனால் அரசின் செயல்பாடுகளும் வலுவாக இருந்தது என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் உலக வங்கி அறிக்கையிலும் கூறியிருந்தது.

அரசு முதலீடுகள் அதிகரிப்பு, முதலீடு சார்ந்த சீரமைப்புகள் மேம்பட்டு வருகிறது. உற்பத்தி துறை வளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.