வணிகம்

மத்திய அரசின் சிறப்புச் சலுகைகளால் மீண்டு வருமா சுற்றுலாத் துறை? - 'நியூஸ் 360' பார்வை

மத்திய அரசின் சிறப்புச் சலுகைகளால் மீண்டு வருமா சுற்றுலாத் துறை? - 'நியூஸ் 360' பார்வை

நிவேதா ஜெகராஜா

கொரோனா பரவலால் பல துறைகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டாலும் அதிக பாதிப்பை சந்தித்த துறைகளுள் ஒன்று சுற்றுலா துறை. உதாரணத்திற்கு தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் முழு முடக்கம் அமல்படுத்தபட்டு ஊட்டி சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதன் காரணமாக ஊட்டி தோட்டக் கலைத் துறைக்கு மட்டும் 7 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சர்வதேச அளவில் பார்ர்கும் போது இழப்பு மேலும் அதிகம்.

தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கி முழுமுடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் சூழலில், மத்திய அரசு பல்வேறு துறைகளுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது. அதில் சுற்றுலா துறையை மேம்படுத்த சில சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதன்மூலம் சுற்றுலாத்துறை மீள்வதற்கான வழி உண்டாகுமா என்பது பற்றி, இங்கு காணலாம்.

சுற்றுலா துறைக்காக சிறப்பு கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற சுற்றுலாத் துறை பங்குதாரர்களுக்கு 100 சதவீத உத்தரவாதத்தில் 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்கும். பிராந்திய அளவிலும், மாநில அளவிலும் அங்கீகாரம் பெற்ற சுற்றுலா வழிகாட்டிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கடனுதவி கிடைக்கும்.

முக்கிய அறிவிப்பாக சர்வதேச சுற்றுலா துறையை புதுப்பிக்கும் வகையில், முதலில் வரும் 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா விசாவின் அனுமதி காலம் ஒரு மாதம். இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் வரை அல்லது 5 லட்சம் விசாக்கள் வழங்கப்படும் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளால் சுற்றுலா துறை புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் சுற்றுலாத் துறையின் பங்கு எவ்வளவு, எந்த மாதிரியான சுற்றுலா வகைகள் பெரும் பங்களிப்பை அளிக்கின்றன என்பது குறித்து கூடுதல் விவரங்களை 'நியூஸ் 360' நிகழ்ச்சியில் செய்தியாளர் நிரஞ்சன் குமார் விவரித்திருக்கிறார். இது தொடர்பாக பொருளாதார ஆலோசகர் சோம.வள்ளியப்பனும் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.