எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் அண்மையில் எவர் கிவன் என்ற சரக்கு கப்பல் தரைதட்டி நின்றதால் கப்பல் போக்குவரத்து கிட்டத்தட்ட ஐந்து நாட்களுக்கு மேல் அந்த நீர்வழி பாதையில் முடங்கி போனது. சூயஸ் கால்வாய் ஆணையம் கப்பலை மீட்கும் முயற்சிகளை இரவு பகல் பார்க்காமல் மேற்கொண்டது. இறுதியில் கப்பலை மீட்டு மீண்டும் மிதக்க செய்தது. இருப்பினும் இழப்பீடு வேண்டும் என சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டு வந்தது.
கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கான சம்பளம், பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கான செலவுகள், கால்வாயில் ஏற்பட்டுள்ள சேதம், மணலை அப்புறப்படுத்துவதற்கான செலவுகள், இழுவை படகுகளுக்கான செலவுகள், வணிக ரீதியிலான நஷ்டம் என அனைத்தும் சேர்த்து உத்தேசமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாக வேண்டும் என எகிப்து கேட்டுள்ளது. இதனை சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஒசாமா ரபீ உறுதி செய்துள்ளார்.
இந்நிலையில் தான் கால்வாய் ஆணையம் இதனை தெரிவித்துள்ளது. கப்பல் எப்படி தரைதட்டியது என்ற விசாரணை முடியும் வரையிலும், தங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரையிலும் கப்பலை ஒரு இன்ச் கூட நகர விட மாட்டோம் என எகிப்து தெரிவித்துள்ளது.