டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த என்.சந்திரசேகரன், குழும நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு உயர்த்தப்பட்டார். அப்போது டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இருந்த ராஜேஷ் கோபிநாதன் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் நியமனம் செய்யப்பட்டவர் கடந்த வாரம் ஐந்தாண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். தவிர மேலும் அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 2027-ம் ஆண்டு பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறார்.
சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டாவது பெரிய நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. மேலும் சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. முதல் இடத்தில் அசெசன்சர் நிறுவனம் இருக்கிறது. தற்போது கோபிநாதனுக்கு 50 வயது மட்டுமே ஆகிறது என்பதால் இன்னும் பல ஆண்டுகளுக்கு இவரே தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பார் என்னும் யூகங்களும் இருக்கின்றன.
கடந்த ஐந்தாண்டுகளில்..2017-ம் ஆண்டு பொறுப்பேற்கும்போது நிறுவனத்தின் வருமானம் 18.5 பில்லியன் டாலராக இருந்தது. தற்போது நிறுவனத்தின் வருமானம் 25 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. நிகர லாபமும் 3.8 பில்லியன் டாலரில் இருந்தது 4.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இவர் பொறுப்பேற்கும்போது நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.46 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.13 லட்சம் கோடிக்கு மேல் டிசிஎஸ் சந்தை மதிப்பு இருக்கிறது. இவரது காலத்தில்தான் 100 பில்லியன் டாலர், 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பை டிசிஎஸ் தொட்டது. ஒரு பங்கின் விலை 1,200 ரூபாயில் இருந்து தற்போது 3,500 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
அதேபோல பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இவர் பொறுப்பேற்கும்போது 3.90 லட்சமாக இருந்த பணியாளர்களின் எண்ணிகை, தற்போது தற்போது 5.50 லட்சத்துக்கும் மேலாண பணியாளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சம் பணியாளர்கள் பெண்கள் என்பது கவனிக்கத்தக்கது. அதேபோல கடந்த ஐந்தாண்டுகளில் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் பெண்கள் உயர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
வெளியேறும் விகிதம் தற்போது ஐடி நிறுவனங்களின் முக்கியமான சிக்கலே பணியாளர்கள் வெளியேறுவதுதான். இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் வெளியேறும் விகிதம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் டிசிஎஸ் நிறுவனத்தில் 8.6 சதவீதம் அளவுக்கு மட்டுமே வெளியேறும் விகிதம் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
கோவிட்டுக்கு முன்பாக டிசிஎஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சர்வதேச அளவில் உள்ள முக்கிய நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களுக்கு சென்றிருக்கிறார்கள். அமெரிக்கா, சீனா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அடுத்தகட்ட திட்டம் குறித்த பல தகவல்களை சேர்த்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில்தான் நிறுவனத்துகான யுத்தியை வகுத்திருக்கிறார்கள் என போர்ப்ஸ் எழுதி இருக்கிறது. கோவிட்டுக்கு பிறகு ஐடி நிறுவனங்களின் ஹைபிரிட் மாடலில் செயல்பட தொடங்கின. பெரும்பாலானவர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தனர்.
தற்போது பணியாளர்கள் மெல்ல அலுவலகத்துக்கு வரத்தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் டிசிஎஸ் 2025-ம் ஆண்டு 25 சதவீத பணியாளர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருப்பார்கள். அதேபோல ஒருவரின் மொத்த பணிகாலத்தில் 25 சதவீதம் மட்டும் அலுவலகத்தில் இருந்தால் போதும் என இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. வீட்டில் இருந்து வேலை என்பது குறுகிய காலத்துக்கு பயன் அளித்தாலும் நீண்ட காலத்துக்கு பயன் அளிக்குமா? 2027-ம் ஆண்டில் நிறுவனத்தின் நிலை என்னவாக இருக்கும்? காத்திருப்போம்.