கொரோனா காலத்தில் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கும்போது அத்தியாவசியத்தைத் தாண்டிய இதர பொருள்களின் விலை குறித்து நாம் பெரிதும் கவலைப்படவில்லை. குறிப்பாக கட்டுமானத்துறையில் நடக்கும் மாற்றங்களை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. பல பெரிய ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன; ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்படி பல விஷயங்கள் இந்தக் காலத்தில் நடந்தன. பங்குச்சந்தை, தங்கம், முக்கிய கமாடிட்டிகளின் விலை உயரந்த பிறகு, முதலீட்டுக்கு இருக்கும் வாய்ப்பு ரியல் எஸ்டேட். அதனால் அடுத்த சில ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் பெரிய அளவுக்கு வளர்ச்சி அடையும் என கணித்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களாக ஸ்டீல் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், ஸ்டீல் நிறுவனங்ளின் கூட்டு செயல்பாடுகள் மீது மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக, சில நாள்களுக்கு முன்பு எந்தப் புகாரும் வராத நிலையிலும், மத்திய அரசு தன்னிச்சையாகவே தெரிவித்திருக்கிறது. ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலையை உயர்த்தி இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பாக போட்டிகளை நெறிப்படுத்தும் ஒழுங்குமுறை ஆணையம் (Competition Commission of India - CCI) விசாரணை நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஸ்டீல் விலையில் நடந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்து பாரதி ஹோம்ஸ் நிறுவனத்தின் அருண் பாராதியிடம் பேசினோம்.
"ஒரு டன் சுமார் 45,000 ரூபாய் அளவுக்கு இருந்தது. ஆனால், இந்த விலை சுமார் 62000 ரூபாய் வரை கூட இருந்தது. தற்போது பட்ஜெட்டில் இறக்குமதி சிறிதளவுக்கு குறைக்கப்பட்டிருப்பதால் ஸ்டீல் விலை சிறிதளவுக்கு குறைந்திருக்கிறது. இருந்தாலும் கடந்த கால சராசரி விலையுடன் ஒப்பிடும்போது குறைந்தபட்சம் 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்தே இருக்கிறது. ஸ்டீல் நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து விலையை உயர்த்துகின்றவனா என்பதைவிட சிமென்ட் நிறுவனங்களின் 'கார்டெல்' அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்" என கூறினார்.
'ஒவ்வொரு ஸ்டீல் நிறுவனமும் இரும்புதாது சுரங்களை வைத்துள்ளன. மின்சார கட்டணம் உயரவில்லை, பணியாளர் சம்பளங்கள் உயர்வில்லை. அனைத்து விஷயங்களும் சீராக இருக்கும்போது ஏன் ஸ்டீல் விலை உயர்கிறது என்பது எனக்கு புரியவில்லை' என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். 'கடந்த ஆண்டு ஜூன் முதல் ஸ்டீல் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மேலும், சிமென்ட் மற்றும் ஸ்டீல் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருந்தால் 5 டிரில்லியன் டாலர் என்னும் பொருளாதார இலக்கை நாம் அடைவது கடினம்' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஸ்டீல் விலை கட்டுமானத் துறையை பாதிப்பது மட்டுமல்லாமல், உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கிறது. அதனால் தற்போது விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ஸ்டீல் நிறுவனங்கள் எதுவும் நடக்காதது போல பேட்டியளிக்கின்றன. 'ஸ்டீல் விலை என்பது சர்வதேச அளவில் தொடர்புடையது. நாம் தனித்து நிற்கமுடியாது. ஏற்ற இறக்கம் என்பது தவிர்க்க முடியாது. மூலப்பொருள்கள் நிலையான விலையில் கிடைத்தால் எங்கள் அளவுக்கு யாரும் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். ஆனால் சர்வதேச சந்தை விலைக்கு ஏற்பவே நாங்கள் செயல்பட வேண்டி இருக்கிறது' என டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டிவி நரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் கூறும்போது, 'அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை விட இந்தியாவில் ஸ்டீல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது' என தெரிவித்தார்.
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கூறும்போது, 'அமெரிக்காவை விட ஐந்து சதவீதம் குறைவாக கொடுப்பது என்பது எப்படி சரியான வாதமாக இருக்க முடியும். ஒரு கிலோ 33 ரூபாயில் இருந்து ஒரு கிலோ 66 ரூபாய்க்கு எப்படி உயர்ந்தது என்ன காரணம்?' என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
'கார்டெல்' என்றால் என்ன?
ஒவ்வொரு துறையிலும் போட்டி இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும். போட்டியே இல்லை என்றால் சம்பந்தபட்ட நிறுவனம் சொல்வதுதான் விலை என்னும் நிலை இருப்பதால்தான் போட்டியை சந்தை விரும்புகிறது. ஆனால், அதேசமயம் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக கைகோத்துவிட்டால் அதுதான் 'கார்டெல்'.
போட்டியாளர்கள் ஒன்றாக சேர்ந்து விலையை ஒன்றாக உயர்த்துவார்கள்; இல்லை, போட்டியாளர்கள் ஒன்றாக சேர்த்து உற்பத்தியை குறைப்பார்கள். இதன்மூலம் விலையை நிறுவனங்களின் திட்டத்துக்கு ஏற்ப வைத்துக்கொள்ள முடியும்.
புதிய போட்டியாளர்கள் உருவாக மாட்டார்களா என கேள்வி எழலாம். சிமென்ட், ஸ்டீல் போன்ற துறைகளில் புதிதாக நிறுவனங்கள் நுழைவது என்பது கடினம். பெரிய முதலீடு தேவைப்படும் என்பதால், இந்தத் துறையில் களமிறங்குவதும் கடினம், உற்பத்தியை தொடங்குவதற்கும் சில ஆண்டுகள் ஆகும்.
இந்தியாவின் தற்போதைய மொத்த ஸ்டீல் உற்பத்தி 140 மெட்ரிக் டன். கிட்டத்தட்ட 90 சதவீத உற்பத்தித் திறனில் இந்த ஆலைகள் இயங்குகின்றன. இருந்தாலும், தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரியல் எஸ்டேட் துறையில் உருவாகியுள்ள தேவை மட்டுமல்லாமல், மத்திய அரசும் கட்டுமான திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. அதனால், வரும் காலத்தில் தேவை மேலும் உயரும். 2024-25-ம் ஆண்டுவாக்கில்தான் 180 மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தித் திறன் உயரும் என்பதால் உள்நாட்டு தேவையை சமாளிக்க வேண்டி இருக்கிறது.
இந்த விவகாரத்தை நெறிப்படுத்தும் 'போட்டி ஒழுங்குமுறை ஆணையம்' இதற்கு முன்பு இருமுறை ஸ்டீல் நிறுவனங்களில் ஆய்வு நடத்தி இருக்கிறது. ஆனால், தவறு நடக்கவில்லை என அறிவித்தது. ஆனால், 11 சிமென்ட் நிறுவனங்கள் மறைமுக கூட்டணி அமைத்ததற்காக 6700 கோடி ரூபாயை 2016-ம் ஆண்டு அபராதம் விதித்தது.
மாற்றுதான் என்ன?
இந்த நிலையில், ஸ்டீலுக்கு மாற்று வழிகளை கண்டறிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். சிந்தெட்டிக் பைபர் அல்லது காம்போசிட் பைபர் பார்களை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம் என சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.
விலை உயர சர்வதேச காரணமா அல்லது நிறுவனங்களின் கூட்டா என்பதை கண்டறிவதில் தவறில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு உறுதியாகச் சொல்லலாம்.\
- வாசு கார்த்தி