இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் அதற்கான திட்டமிடல்களில் இறங்கியுள்ளன. ஆனால், உடனடியாக எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவரும் திட்டமிட்டமில்லை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சித்தார்த்தா லால் இதனை தெரிவித்திருக்கிறார். "எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நீண்ட கால திட்டம் வைத்திருக்கிறோம். இதற்கென பிரத்யேக அதிகாரிகளின் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், குறுகிய காலத்தில் சந்தைக்கு இந்த வாகனங்கள் வராது. அது பொருளாதார ரீதியிலும் சாத்தியமில்லாத விலையிலே இருக்கும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்தில் இதற்கான ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அடுத்து நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில்தான் ராயல் என்ஃபீல்டின் எலெக்ட்ரிக் வாகனம் சந்தைக்கு வரும்" என சித்தார்த்தா லால் தெரிவித்தார்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 250 சிசி முதல் 750 சிசி வரையிலான வாகனங்களை தயாரிக்கிறது. இந்தியா மட்டுமல்லாலம் 60-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
ராயல் என்ஃபீல்டு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிவித்திருந்தாலும், இதனுடைய போட்டி நிறுவனங்களான பிஎஸ்ஏ, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட வாகனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளன.