ரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான சி15 மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.
ரியல்மி சி15 ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது. இந்த போனை இந்தியாவில் வெளியிடுவது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. பட்ஜெட் விலையை மையமாக கொண்டு உற்பத்தி செய்யபட்டுள்ள இந்த போன், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும். 6.5 இன்ச் கொண்ட எல்.சி.டி டிஸ்ப்ளேவுடன், பாதுகாப்பு வழங்கும் கொரிலா கிளாஸும் இணைக்கப்பட்டுள்ளது.
3 வகையான ஸ்டோரேஜ் வேறுபாடு கொண்டு வெளியாகியுள்ள இந்த போன், அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 3 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.10,800 ஆகும். 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகத்தின் விலை ரூ.11,300 எனவும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் கொண்ட ரகம் ரூ.12,800 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 128 ஜிபி வரை மைக்ரோ சிப் மூலம் ஸ்டோரேஜை அதிகரித்துக்கொள்ள முடியும்.
கேமராவை பொறுத்தவரையில் 13 எம்பி (மெகா பிக்ஸல்) + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி என நான்கு கேமராக்கள் பின்புறத்தில் உள்ளன. அத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமராவும் உள்ளது. நீண்ட நேரம் ஜார்ஜ் நிற்க வேண்டும் என்ற அடிப்படையில் 6,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.