ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு உள்ள புதிய விலைக்கு பழைய பொருட்களை விற்பனை செய்வதற்கான கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட பொருட்களை ஜி.எஸ்.டி வரிக்கு மாற்றி விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், முன்பே பேக் செய்யப்பட்ட பொருட்களின் மேல் பழைய விலைக்கு அருகில் புதிய விலையை ஸ்டிக்கர் ஒட்டி செப்டம்பர் 30ம் தேதிவரை விற்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பல நிறுவனங்களும், சில்லறை விற்பனை கூட்டமைப்புகளும் பெருமளவு பொருட்கள் விற்கப்படாமல் இருப்பதால் கூடுதல் அவகாசம் கோரியது.
இந்நிலையில் நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கூட்டமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, ஜி.எஸ்.டி விலை மாற்றத்திற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். விப்ரோ, ஹெச்பிஎல் போன்ற நிறுவனங்கள் விடுத்த வோண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கெடுவை நீட்டிக்காவிட்டால் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் வீணாகிவிடக்கூடும் என நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.