வணிகம்

இன்றும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!

இன்றும் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை!

jagadeesh

பெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 18 காசு விலை குறைந்து 92 ரூபாய் 77 காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 19 காசு விலை இறங்கி 86 ரூபாய் 10 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மூன்று வாரங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில், 2 ஆவது நாளாக இன்று விலை குறைந்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் ஒரு சதவிகிதம் சரிந்து 63.41 டாலரில் வர்த்தகமாகிறது. முன்னதாக பெட்ரோல், டீசல் வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர எந்த மாநிலமும் விரும்பவில்லை என மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்தார். பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.

இதை விட்டுக்கொடுத்தால் வேறு எந்த வகையில் வருமானம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தற்போது பெட்ரோலியப் பொருட்கள் மீது மத்திய, மாநில அரசுகள் இணைந்து 60 சதவிகித வரியை விதிக்கும் நிலையில், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் அதிகபட்சமாக 28 சதவிகிதம் மட்டுமே விதிக்க முடியும்.

இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பதால் இன்னும் 8 முதல் 10 ஆண்டுகளுக்கு பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட வாய்ப்பே இல்லை எனத் தெரிவித்தார்.