வணிகம்

முதியவர்களுக்கு வீட்டிற்கே வந்து பண விநியோகம் - ‘பே டிஎம்’ புதிய திட்டம்

முதியவர்களுக்கு வீட்டிற்கே வந்து பண விநியோகம் - ‘பே டிஎம்’ புதிய திட்டம்

webteam

முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘பே டிஎம்’ (Paytm) வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை வீட்டிற்கே வந்து விநியோகிக்கும் திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் மே 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் முதியவர்கள் தான் என்பதால், அவர்களை வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அத்துடன் ஏடிஎம் மையங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கும் அவர்கள் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவ்வாறு ஏடிஎம் மையங்கள் செல்ல முடியாமல் சிரமப்படும் முதியவர்களுக்கு வீட்டிற்கே வந்து பணத்தை விநியோகிக்க ‘பே டிஎம்’ நிறுவனம் ‘கேஷ் அட் ஹோம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் பொதுமுடக்கத்தில் சிக்கியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் வீட்டிற்கே சென்று பணத்தை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘பே டிஎம் பேங்’ செயலியை வைத்துள்ளவர்கள் அதில் தங்கள் பணத்தை பரிமாற்றம் செய்து, ‘கேஷ் அட் ஹோம்’ மூலம் பணத்தை வீட்டிற்கே வரவைத்து பெற்றுக்கொள்ளலாம்.

இதன்மூலம் குறைந்த பட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.5000 வரை வீட்டிற்கு வரவழைத்து பணம் பெற முடியும். அதுமட்டுமின்றி ‘கேஷ் அட் ஹோம்’ தேவையை மேற்கொண்ட 2 நாட்களில் பணம் கைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.