வணிகம்

கொரோனா பேரிடர்: 'நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட 3.2 கோடி இந்தியர்கள்!'

கொரோனா பேரிடர்: 'நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழே தள்ளப்பட்ட 3.2 கோடி இந்தியர்கள்!'

webteam

கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பேரிடரால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் போன்ற சூழ்நிலைகள் காரணமாக எழுந்த நிதி சிக்கல்கள், சுமார் 3 கோடியே 20 லட்சம் இந்தியர்களை நடுத்தர வர்க்கத்திலிருந்து கீழே தள்ளியிருக்கிறது. மேலும், பல ஆண்டுகால பொருளாதார லாபங்களை அம்மக்கள் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வறிக்கை கூறுகிறது. அதேநேரத்தில் வேலை இழப்புகளால் லட்சக்கணக்கானோர் வறுமைக்குத் தள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட பியூ ஆராய்ச்சி மையம் ( Pew Research Centre) இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. கொரோனா தொற்று இல்லாத நிலையில் அடையக்கூடிய எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, நடுத்தர வர்க்கத்தில் உள்ள இந்தியர்களில், ஒரு நாளைக்கு 10 டாலர் முதல் 20 டாலர் வரை (ரூ.700 - ரூ.1,400) சம்பாதிப்பவர்கள், சுமார் 3 கோடியே 20 லட்சம் அளவில் குறைந்துவிட்டனர். அதாவது, தற்போதையை நிலையில் இந்த வருடத்தில் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 60 லட்சமாக குறைந்துவிட்டது. கொரோனா பேரிடருக்கு முன்பு இந்த எண்ணிக்கை 9 கோடியே 90 லட்சமாக இருந்தது. அதாவது, இந்திய நடுத்தர மக்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு தற்போது குறைந்துள்ளது.

இதே பியூ ஆராய்ச்சி மையம், ஏழை மக்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 டாலர் அல்லது அதற்கும் குறைவான வருமானத்துடன் (சுமார் ரூ.145) வாழும் மக்களின் எண்ணிக்கை 7 கோடியே 50 லட்சமாக அதிகரித்துள்ளது. ஏனெனில் கொரோனா பேரிடரால் ஏற்பட்ட மந்தநிலை அவர்களை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்றுள்ளது.
கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள நிலை மட்டுமில்லாமல். இந்த ஆண்டு எரிபொருள் விலையில் கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்வு, வேலை இழப்புகள் மற்றும் சம்பள வெட்டுக்கள் போன்றவையும் பல லட்சக்கணக்கான மக்களை மென்மேலும் பொருளாதார ரீதியில் வதைத்துள்ளது. இதனால் பலர் வெளிநாடுகளில் வேலை தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதேவேளையில், சீனாவில் வாழ்க்கைத் தரங்களின் வீழ்ச்சி மிதமானதாக இருந்தது. நடுத்தர வருமானப் பிரிவில் மக்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக குறைந்துவிட்டது. எனினும், வறுமை நிலைகள் மாறாமல் இருந்தன. ``கொரோனா காரணமாக சீனாவை விட இந்திய நடுத்தர வர்க்கத்தில் அதிக வீழ்ச்சியும், வறுமையும் அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது" என்று உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளை மேற்கோளிட்டு பியூ ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 2011 முதல் 2019 வரை சுமார் 5 கோடியே 70 லட்சம் மக்கள் நடுத்தர வருமானக் குழுவில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

கடந்த 2020 ஜனவரியில், உலக வங்கி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கிட்டத்தட்ட அதே அளவிலான பொருளாதார வளர்ச்சியை முறையே 5.8 சதவீதம் மற்றும் 5.9 சதவீதமாக கணித்துள்ளது. ஆனால், கொரோனா பேரிடர் ஆரம்பித்து ஒரு வருடம் நெருங்கும் வேளையில், உலக வங்கி இந்த ஜனவரியில் தனது கணிப்பை திருத்தியது. அதன்படி, இந்தியாவுக்கு 9.6 சதவீத பொருளாதார சரிவாகவும், சீனாவிற்கு 2 சதவீத பொருளாதார வளர்ச்சியாகவும் கணித்துள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கொரோனா பாதிப்புகள் சரிந்த வந்த நிலையில், தற்போது இந்தியாவின் சில மாநிலங்கள் இரண்டாவது அலை நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் அச்சத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.