வணிகம்

எல்லைப் பிரச்னை: மத்திய அரசின் அதிரடியால் சிக்கலில் சீனாவின் 150 முதலீடுகள்!

எல்லைப் பிரச்னை: மத்திய அரசின் அதிரடியால் சிக்கலில் சீனாவின் 150 முதலீடுகள்!

webteam

மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, சீன நிறுவனங்களின் இந்திய முதலீடுகள் கடுமையான சிக்கல்களை சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை இருநாடுகளுக்கு இடையேயான சுமூக உறவை பாதிக்கும் வகையில் அமைந்து வருகிறது. சமீப ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் போக்கு வலுத்து வருகிறது. லடாக் எல்லைப் பிரச்னை, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை அதிகரித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் சீனாவை பொருளாதார ரீதியாக அடக்கிவைக்க சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, சில சீன செயலிகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டது.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களுக்கு இந்திய அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. எந்தவொரு சீன நிறுவனத்திற்கும் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும், அத்தகைய முன்மொழிவு எதுவும் ஏற்கப்படவில்லை. எல்லை விஷயத்தில் சீனாவின் அடுத்த நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேநேரத்தில், நிலுவையில் உள்ள சில சீன அன்னிய நேரடி முதலீடு திட்டங்கள் இன்னும் பரிசோதனையில் உள்ளன என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. கிரேட் வால் மோட்டார் மற்றும் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் கார்ப் உள்ளிட்ட சீனாவின் 45 முதலீட்டு திட்டங்களை இந்தியா நிறுத்த திட்டமிட்டது என்று தகவல் வெளியான ஓரிரு நாளில், இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.

ஒரு நாளுக்கு முன்புதான், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்திய அரசாங்கம், "சீனாவின் 45 முதலீட்டு திட்டங்களை இந்தியா நிறுத்த உள்ளது, அதில் கிரேட் வால் மோட்டார் மற்றும் எஸ்.ஏ.ஐ.சி மோட்டார் கார்ப் நிறுவனங்களை உள்ளடக்கியிருக்கலாம்" என்று கூறியிருந்தது. மேலும், ராய்ட்டர்ஸ் வெளியிட்ட அதே செய்தியில், ``மேற்கு இமயமலைப் பிராந்தியத்தில் சீன துருப்புக்கள் ஊடுருவலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீன நிறுவனங்களின் முதலீடு மீதான கட்டுப்பாடுகளை இந்தியா கடுமையாக்கிய பின்னர் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைப்பாட்டிற்கு சீனா, இந்திய துருப்புக்களை குற்றம் சாட்டியது" என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இந்த நடவடிக்கையால், 2 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள நிறுத்தப்பட்ட 45 முதலீட்டு திட்டங்கள் உட்பட சீன நிறுவனங்களின் சுமார் 150 முதலீட்டு திட்டங்கள் சிக்கலை சந்தித்துள்ளன. இதேபோன்ற சிக்கலை சில அமெரிக்க, ஜப்பான் நிறுவனங்களுக்கும் சந்தித்து வருகின்றன. காரணம், அவை சீனாவின் ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்ற காரணத்தினால்தான். ஜனவரி 22 அன்று நடைபெற்ற கூட்டத்தில், ஹாங்காங்கை தளமாகக் கொண்ட நிறுவனங்களின் மூன்று திட்டங்கள் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப ஒப்புதல்களுக்காக நிர்ணயிக்கப்பட்ட 45 திட்டங்களில் பெரும்பாலானவை உற்பத்தித் துறையில் இருந்தன என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.