வணிகம்

நுண் நிதி நிறுவனங்கள் தரும் நெருக்கடிகள்: சுய உதவிக் குழுப் பெண்கள் படும் பாடுகள்!

நுண் நிதி நிறுவனங்கள் தரும் நெருக்கடிகள்: சுய உதவிக் குழுப் பெண்கள் படும் பாடுகள்!

Sinekadhara

கொரோனா தொற்றும், ஊரடங்கால் நேரிட்ட வாழ்வாதார பிரச்னைகளும், சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு புதிய நெருக்கடிகளை தந்திருக்கின்றன. கடன் கட்ட முடியாமல் தவிக்கும் பெண்களை, வீடுதேடி வந்து மிரட்டும் நுண் நிதி நிறுவனங்களால் செய்வதறியாது திகைத்திருக்கிறார்கள் எண்ணற்றோர். அவர்களில் சிலரின் வேதனைப் பதிவை பார்க்கலாம்.

அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை. கொரோனாவும், வேலையின்மையும் போட்டிப்போட்டுக் கொண்டு வாட்டும் சூழல். அத்தனைக்கும் மேல், வீட்டு வாசலில் நின்று சண்டையிடும் நுண் நிதிநிறுவன ஊழியர்களின் நெருக்கடி. இந்த காட்சிகள் திருச்சியில் சர்வசாதாரணமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் அதிக சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஐம்பதுக்கும் அதிக தனியார் நுண் நிதி நிறுவனங்கள் கடன் அளித்துள்ளன.

ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 25 பெண்கள் உள்ள நிலையில், குறைந்தபட்சம் 5 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை இந்த நிதிநிறுவனங்கள் கடன் தந்துள்ளன. ₹ 5 ஆயிரம் கடன் தொகையை வாரம் ₹ 250 வீதத்திலும் ₹ 40 ஆயிரம் கடன் தொகையை வாரம் ₹ 2000 வீதத்திலும் வட்டியுடன் வசூலிக்கிறார்கள். ஆனால், கொரோனா கால ஊரடங்கால் வேலை இல்லாத நிலையில், கடன் தவணையை கட்ட முடியாத இயலாமையில் தவிக்கிறார்கள் சுயஉதவிக்குழுப் பெண்கள்.

ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு ஒரு சிலருக்கு வேலை கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. அதேசமயம், ஊரடங்கு காலத்தில் கட்டாமல் போன நிலுவைத்தொகை, வட்டி மற்றும் அபராதத்தொகை என பண நெருக்கடி தராமல், தங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோருகிறார்கள் இப்பெண்கள்.

வாங்கிய கடனை அபராதம் இல்லாமல் திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் 3 மாதம் முதல் ஓராண்டுவரை காலம் அவகாசம் தர வேண்டும், அதற்கான உத்தரவை, தனியார் நிதிநிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கோருகிறார்கள் சுயஉதவிக் குழுப் பெண்கள்.