எல்ஐசியின் மெகா ஐபிஓ இந்த நிதியாண்டு முழுவதும் விற்பனைக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் (ஐபிஓ) இந்த 2021-22 நிதியாண்டில் சாத்தியமில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், சந்தை ஏற்ற இறக்கத்தையும் கருத்தில் கொண்டு எல்ஐசியின் மெகா ஐபிஓவை அரசாங்கமே தாமதப்படுத்தும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 13 அன்று, சந்தை கட்டுப்பாட்டளரான செபி(SEBI)யிடம் எல்ஐசி ஐபிஓக்கான வரைவு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் எல்ஐசி ஐபிஓக்கு செபி தனது ஒப்புதலை வழங்கியது. எல்ஐசியில் சுமார் 31.6 கோடி மதிப்பிலான பங்குகளை அல்லது 5 சதவீத பங்குகளை விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபியிடம் புதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் எல்ஐசி ஐபிஓவைத் தொடங்க மே 12 வரை அவகாசம் உள்ள நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் விற்பனைக்கு பட்டியலிடுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
எல்ஐசி ஐபிஓ இந்திய பங்குச் சந்தையின் வரலாற்றிலேயே மிகப்பெரியதாக இருக்கும். பட்டியலிடப்பட்ட எல்ஐசியின் சந்தை மதிப்பீடு ரிலையன்ஸ், டிசிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும்.