பங்கு சந்தை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் சுமார் 22 கோடி பங்குகளை விற்று 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்தது. உக்ரைன் போரால் பங்கு வெளியீடு தள்ளிபோன நிலையில், திங்கள்கிழமை மிகப்பெரிய முதலீட்டாளர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு நாட்களில் மட்டும் 5,620 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஊழியர்களுக்கான பங்கு விற்பனை இன்று தொடங்குகிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மக்களின் நம்பிக்கையை பெற்ற எல்.ஐ.சி.யின் பங்குகளை வாங்குவதற்கு கடும் போட்டி இருக்கும் என நம்பப்படுகிறது.
ஒரு பங்கின் விலை 902 ரூபாய் முதல் 949 ரூபாய் வரை இருக்கும் என எல்ஐசி நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவர் ஆர் குமார் அறிவித்துள்ளார். 22 கோடி பங்குகளில், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு 2.21 கோடி பங்குகளும், எல்ஐசி ஊழியர்களுக்கு 15.81 கோடி பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு ஒதுக்கீட்டில் 15 பங்குகள் இருக்கும் என்றும் ஒருவர் அதிகபட்சமாக 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிக்கலாம் என்றும் குறைந்தபட்சமாக 14 ஆயிரத்து 235 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 60 ரூபாய் வரை தள்ளுபடி எனவும், ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 ரூபாய் தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் மே 9-ஆம் தேதி வரை தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்றும், விண்ணப்பங்களின் அடிப்படையில் பங்கு விலை என்ன, யாருக்கு எத்தனை பங்குகள் ஒதுக்கீடு என்பது முடிவு செய்யப்படும் என எல்ஐசி கூறியுள்ளது. அதன்பிறகு, மே 17ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகள் வர்த்தகம் செய்யப்படும்.
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதால் பாலிசிதாரர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் இந்த பங்கு விற்பனைக்குப் பிறகும் எல்ஐசி நிறுவனத்தின் 96.5 விழுக்காடு பங்குகள் மத்திய அரசிடமே இருக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆயுள் காப்பீடு துறையில் முன்னணியில் உள்ளதோடு மட்டுமல்ல லாபத்திலும் இயங்கி வருகிறது எல்.ஐ.சி. இதனால், ஏராளமானோர் எல்ஐசியின் பங்குகளை வாங்க முன்வருவர் என மத்திய அரசு நம்புகிகிறது.
தொடர்புடைய செய்தி: 'வெயில் அதிகமிருப்பதால் பள்ளிக்கு முன்கூட்டியே விடுமுறையா?' - அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்