சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திடமிருந்து மொபைல் கேம் வெளியீட்டு உரிமையை வாபஸ் பெற பப்ஜி நிறுவனம் முடிவெடுத்தாலும், பப்ஜி மீதான தடையை இந்தியா ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபலமான ஆன்லைன் மல்டிபிளேயர் போர் விளையாட்டான பப்ஜி, இந்த மாத தொடக்கத்தில் இந்திய அரசு தடைசெய்த 118 மொபைல் செயலிகளில் ஒன்றாகும். இந்த சூழலில் இந்தியாவில் தனது நிறுவனத்துடன் சீன நிறுவனமான டென்சென்ட் கொண்டிருக்கும் அனைத்து தொழில்முறை உறவுகளையும் இனி தொடரப்போவதில்லை என்று பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்கொரிய நிறுவனமான பப்ஜி கார்ப்பரேசன், அனைத்து துணை நிறுவனங்களின் முழு பொறுப்பையும் ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்திய பயனர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவங்களை வழங்குவதற்கான வழிகளை ஆராய்வதாகவும் அது கூறியுள்ளது.
இருப்பினும் பப்ஜி விளையாட்டின் வன்முறை தன்மை குறித்து எல்லா தரப்பிலிருந்தும் பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அதனால் இந்த தடை நீக்க வாய்ப்பில்லை என்று அரசின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
தென் கொரியாவில் உள்ள பப்ஜி கார்ப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் “இந்தியாவின் கவலைகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாகவும், முன்னேற்றம் தேவைப்படும் எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். "இந்தியாவில் ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் உருவாக்குவதற்காக நாங்கள் ஜியோ பிளாட்ஃபார்ம்களுடன் ஆரம்ப பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.